ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி | கோப்புப் படம்

 
உலகம்

போரில் எங்களது ‘தற்காப்பு நடவடிக்கை’ தேவைப்படும் வரை தொடரும்: ஐ.நா.-வில் ஈரான் திட்டவட்டம்

மோகன் கணபதி

ஜெனிவா (சுவிட்சர்லாந்து): ஈரானுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக உலகம் ஒன்றிணைய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தில் தெரிவித்த ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி, “தேவைப்படும் வரை ஈரான் தன்னை தற்காத்துக் கொள்ளும்” என்று கூறியுள்ளார்.

ஈரானில் பெண்கள் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தொடர்பாக நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றிய சையத் அப்பாஸ் அராக்சி, ‘‘அநீதிகளுக்கு முன்னால் காட்டப்படும் அலட்சியமும் மவுனமும் எந்த பாதுகாப்பையும் அமைதியையும் கொண்டு வராது. அது மேலும், பாதுகாப்பின்மையையும் உரிமை மீறல்களையும் வரவழைக்கும்.

          

ஐக்கிய நாடுகள் சபையும், அதன் அடிப்படைக் கோட்பாடுகளும், ஒட்டுமொத்த மனித உரிமை கட்டமைப்பும் கடுமையான ஆபத்தில் உள்ளன. நீங்கள் அனைவரும் ஆக்கிரமிப்பாளர்களைக் கண்டித்து, ஈரானியர்களுக்கு எதிராக அவர்கள் செய்யும் வெறுக்கத்தக்க குற்றங்களுக்கு அவர்களை பொறுப்பாக்க வேண்டும்.

ஈரான் ஒருபோதும் போரை நாடியதில்லை. ஈரானியர்கள் பூமியில் உள்ள வளமான நாகரிகங்களில் ஒன்றைப் பெற்ற ஓர் அமைதியான, உன்னதமான தேசத்தவர்கள்.

எனினும், கொடூரமான குற்றவாளிகளுக்கு எதிராகத் தங்களைத் தற்காத்துக் கொள்ள அவர்கள் முழுமையான உறுதியையும் தீர்மானத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். தேவைப்படும் வரை ஈரான் தன்னை தற்காத்துக் கொள்ளும்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் அதிநவீன தொழில்நுட்பங்களையும் ராணுவ தரவு அமைப்புகளையும் கொண்ட நாடுகள். அந்த நாடுகளால் ஈரான் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பது திட்டமிட்டது; வேண்டுமென்றே செய்யப்பட்டது. இந்த கொடூரத்தை நியாயப்படுத்தவோ, மறைக்கவோ முடியாது. மவுனத்துடனோ அலட்சியத்துடனோ இதை எதிர்கொள்ளக்கூடாது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்தி வரும் தாக்குதல்களில் செஞ்சிலுவைச் சங்க மீட்புப் பணியாளர்கள், சுத்திகரிப்பு நிலையங்கள், ஆம்புலன்ஸ்கள், மருத்துவமனைகள், சுகாதாரப் பணியாளர்கள்,நீர் ஆதாரங்கள், குடியிருப்புப் பகுதிகள் உள்பட பல பொதுமக்களின் உள்கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டுள்ளன.

ஈரான் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இடிக்கப்பட்டுள்ளன அல்லது சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் உயிரிழந்துள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர்.

ஈரானுக்கு எதிராக இழைக்கப்படும் அட்டூழியங்களின் ஆழத்தை விவரிக்க போர்க்குற்றம் என்ற வார்த்தை போதாது. ஆக்கிரமிப்பாளர்களின் இலக்கு வைக்கும் முறையும் அவர்களின் சொல்லாடல்களும் இனப்படுகொலை செய்வதற்கான அவர்களின் தெளிவான நோக்கத்தில் சிறிதும் சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை. இது ஈரானுக்கு எதிரான தன்னிச்சையான நியாயமற்ற போர்’’ எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT