காத்மாண்டு: நேபாளத்தைப் புரட்டிப்போட்ட பெருவெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 900-ஐ தாண்டி உள்ளது. மீட்பு மற்றும் தேடுதல் பணிகளுக்கு தேவையான உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கி வருகிறது.
நேபாளத்தில் பெருவெள்ளம் தாக்கி நேற்றுடன் 6 நாள்கள் ஆன நிலையில், தொடர்ச்சியாக மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. சேறு மற்றும் இடிபாடுகளுக்கு அடியில் இருந்தும், ஆற்றங்கரையோரங்களில் இருந்தும் கொத்துக் கொத்தாக உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதன்படி உயிரிழந்தோரின் எண்ணிக்கை நேற்று 900-ஐ தாண்டியது. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் கதி என்ன? என்பது இன்னும் தெரியவில்லை.
அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. நேபாளம் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே இந்தியா அனைத்து வழிகளிலும் அந்நாட்டிற்கு தேவையான உதவியையும், ஆதரவையும் வழங்கி வருகிறது.
முதலில் விமானங்கள் மூலம் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்த இந்தியா, நேபாள அரசின் கோரிக்கையை ஏற்று சிறப்பு மீட்புக் குழுக்களையும், மருத்துவக் குழுக்களையும் அனுப்பியது.
மேலும், இறந்த உடல்களை அடையாளம் காண்பதற்காக டிஎன்ஏ மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்ய உதவும் வகையில், 19 பேர் கொண்ட இந்திய தடயவியல் குழுவும் நேபாளம் சென்றுள்ளது. சிலிமே மற்றும் லாங்டாங்கில் உள்ள நீர்மின் நிலையங்களின் சுரங்கங்களில் சிக்கியிருக்கும் நிலையில், அவர்களை பத்திரமாக மீட்பதற்கு இந்தியாவில் இருந்து சென்ற சிறப்பு நிபுணர்கள் குழு தேவையான உதவிகளை வழங்கி வருகிறது.