துபாய்: ஈரானில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற நாடு தழுவிய போராட்டங்களின்போது கைது செய்யப்பட்ட 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈரானில் கடந்த ஜனவரி மாதம் அரசுக்கு எதிராக திடீரென நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
நாட்டில் ஆடை கட்டுப்பாடு விதிப்பதாக பெண்கள் குற்றம் சாட்டி போராட்டத்தில் பங்கேற்றனர். மேலும், சுதந்திரம் வேண்டும் என்று பல இடங்களில் போராட்டம் தொடர்ந்து நடந்தது.
இதையடுத்து டெஹ்ரான் உட்பட பல நகரங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டது. மேலும், ஈரான் அரசு கடுமையான வன்முறையைப் பயன்படுத்தி போராட்டத்தை ஒடுக்கியது. போராட்டக்காரர்கள் மீதுதாக்குதல் நடத்தியதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் மெஹ்தி காசெமி, சலே முகமதி மற்றும் சயீத் தவுதி ஆகிய மூவர் மீது, கோம் நகரில் 2 போலீஸ் அதிகாரிகளைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று ஈரானிய நீதித்துறை தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தது.
இந்நிலையில். போலீஸ் அதிகாரிகளை கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அந்த மூன்று பேருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக மிசான் செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.இதை தொடர்ந்து, கைதாகியுள்ள மற்றவர்களுக்கும் இதேபோல் தொடர்ச்சியாக மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என மனித உரிமை ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வரும் வேளையில் 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.