புதுடெல்லி: அனுமதிக்கப்படாத மற்றும் ஆபத்தான பாதையில் ஹார்முஸ் ஜலசந்தியை விட்டு வெளியேற முயன்ற கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல், கடல் கண்ணிவெடி மீது மோதி வெடித்துச் சிதறி தீப்பற்றியது.
இதுகுறித்து ஈரானுக்கு சொந்தமான இஸ்லாமியப் புரட்சிகர காவல்படை (ஐஆர்ஜிசி) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கச்சா எண்ணெய் ஏற்றப்பட்ட பிரம்மாண்டமான சூப்பர்டேங்கர் கப்பல் ஒன்று அனுமதிக்கப்படாத மற்றும் ஆபத்தான பாதையில் ஹார்முஸ் ஜலசந்தியை விட்டு வெளியேற முயன்றது. அப்போது, அந்தக் கப்பல் கடல் கண்ணிவெடி மீது மோதி வெடித்துச் சிதறி தீப்பற்றியது.
ஜலசந்தியை விட்டு வெளியேற முயன்றபோதும், கடல் கண்ணிவெடி மீது மோதுவதற்கு முன்பும், அந்த கப்பல் தனது வழிசெலுத்தல் மற்றும் உலகளாவிய இருப்பிடக் கட்டுப்பாட்டு அமைப்புகளை (ஜிபிஎஸ்) அணைத்துவிட்டது. ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பையும் விதிமுறைகளையும் மீற முயலும் எந்தவொரு எண்ணெய் கப்பலுக்கும் மிகப்பெரிய தீ காத்திருக்கிறது.
அனுமதிக்கப்படாத பாதைகளைப் பயன்படுத்தும் கப்பல்களுக்கு எதிரான நடவடிக்கை ஹார்முஸ் ஜலசந்தியோடு மட்டும் நின்றுவிடாது. ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் அவை பின்தொடரப்பட்டு தண்டிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா போர் தொடுத்தது. இதையடுத்து, உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கப்பல் பயணிக்கும் முக்கிய கடல்வழியான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. ஐஆர்ஜிசியின் கட்டுப்பாட்டில் உள்ள அப்பகுதியில் கடல் கண்ணிவெடிகள் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.