பெய்ஜிங்: சீனாவில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட எரிவாயு வெடி விபத்தில் 90 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
சீனாவின் வட பகுதியில் உள்ள ஷான்சி மாகாணம் கின்யுவான் கவுண்டியில் உள்ள லியுஷென்யு நிலக்கரி சுரங்கத்தில் வெள்ளிக்கிழமை மாலை எரிவாயு வெடி விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீட்புப் பணியின் போது நேற்று மாலை வரை 90 பேர் சடலங்களாக மீட்கப்பட்டதாகவும் 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசின் ‘சீனா டெய்லி' செய்தி வெளியிட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, விபத்தில் சிக்கியவர்களை முழுமையாக மீட்பதற்கும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
விபத்துக்குப் பிந்தைய பணிகளைச் சரியாகக் கையாள வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட அவர், விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், சட்டத்தின்படி இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள அதிகாரிகள் இந்த விபத்தில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், பணியிடப் பாதுகாப்பில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் ஜி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார். மேலும், பெரிய விபத்துகளைத் தடுக்க, சாத்தியமான அபாயங்களைக் கண்டறிந்து அவற்றை அகற்றுவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி இரங்கல்: பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “சீன சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 90 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். இந்தியர்கள் சார்பாக அதிபர் ஜி ஜின்பிங்குக்கும் சீன மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என கூறியுள்ளார்.