உலகம்

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மோதல்: பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

முசாபராபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நில​வும் கடும் பொருளா​தார நெருக்​கடி, மின்​சார தட்​டுப்​பாடு மற்​றும் பாகிஸ்தான் அரசின் அடக்​கு​முறைக்கு எதி​ராக பொது​மக்​கள் போராட்​டங்​களில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில் ரவால​கோட் புதிய பேருந்து நிலை​யம் அருகே நேற்று போராட்​டத்​தில் ஈடு​பட்​டிருந்த மக்​களை பாது​காப்பு படையினர் தடியடி நடத்தி கலைக்க முயன்​றனர். அப்​போது இருதரப்​பிலும் மோதல் ஏற்​பட்​டது. இதையடுத்து பாது​காப்பு படையினர் நடத்​திய துப்​பாக்​கிச்​சூட்​டில் 6 பேர் உயி​ரிழந்​தனர். இது, பாகிஸ்​தான் அரசுக்கு எதி​ரான அதிருப்​தியை மேலும் தீவிரப்படுத்தி அப்​பகு​தி​யில் பதற்​றத்தை அதி​கரித்​துள்​ளது.

அமெரிக்​கா​வில் வசிக்​கும் பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீர் சமூகத்​தினர் நேற்று முன்​தினம் வாஷிங்​டனில் உள்ள வெள்ளை மாளி​கைக்கு வெளியே ஆர்ப்​பாட்​டம் நடத்​தினர். ஆக்​கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்​தான் அரசின் அடக்​கு​முறை குறித்து சர்​வ​தேச சமூகத்​தின் கவனத்தை ஈர்க்க அவர்​கள் இந்​தப் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். “குடி​யிருப்​புப் பகு​தி​களில் இருந்து பாகிஸ்​தான் ராணுவம் வெளி​யேற வேண்​டும். ஆயுதமற்ற மக்​கள் மீது நடத்தப்படும் கொடூர தாக்​குதல்​களுக்கு எதி​ராக சர்​வ​தேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்று அவர்​கள் வலியுறுத்தினர்.

மேலும், “இணைய சேவை முடக்​கத்​தால், சுமார் 40 லட்​சம் மக்​கள் வெளி​யுல​கத்​துடன் தொடர்பை இழந்​துள்​ளனர். மக்​களின் உயிரைக் காக்​க​வும், மனி​தாபி​மான உதவி​களை வழங்​க​வும் இந்தியா தலை​யிட வேண்​டும். பாதிக்​கப்​பட்ட மக்​களுக்கு மனிதாபி​மான உதவி​கள் சென்​றடைவதை உறுதி செய்ய பூஞ்ச், தோடா எல்​லைப் பகு​தி​கள் வழி​யாக கட்​டுப்​பாட்​டுக் கோடு திறக்கப்பட வேண்​டும்” என்​றும் அவர்​கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்​நிலை​யில் இந்​திய வெளி​யுறவு அமைச்சக செய்​தித் தொடர்பாளர் ரந்​தீர் ஜெய்​ஸ்​வாஸ் நேற்று கூறுகை​யில், “பாகிஸ்தானின் சட்​ட​விரோத ஆக்​கிரமிப்​பின் கீழ் உள்ள பகுதிகளில் பல தசாப்​தங்​களாக நடந்து வரும் சுரண்​டல், அடிப்படை உரிமை​கள் மறுப்​பு, நிர்​வாக ஒடுக்​கு​முறை ஆகியவற்றின் நேரடி விளைவு​தான் இந்​தப் போராட்​டங்​கள்.

உள்​ளூர் மக்​களின் நியாய​மான குறை​களை தீர்ப்​ப​தற்​குப் பதிலாக, பாகிஸ்​தான் அரசு பெண்​கள், குழந்​தைகள் உள்​ளிட்ட அனை​வரின் மீதும் போலீஸ் வன்​முறையை ஏவி வரு​கிறது. பலரின் உயி​ரிழப்​புக்கு வழி​வகுத்​துள்​ளது. உணவு, மருந்து உள்ளிட்ட அத்​தி​யா​வசி​யப் பொருட்​கள் விநி​யோகத்தை தடுத்​து, இணைய சேவையை​யும்​ முடக்​கி​யுள்​ளது. பொது​மக்​கள்​ மீ​தான இந்​த ஒடுக்​கு​முறைக்​கு பாகிஸ்​​தானை சர்​வ​தேச சமூகம்​ பொறுப்பேற்​க செய்​ய வேண்​டும்​” என்​றார்​.

SCROLL FOR NEXT