உலகம்

7 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்

400 பேர் அடங்கிய உயர்நிலைக் குழுவினருடன்...

செய்திப்பிரிவு

பெய்ஜிங்: சு​மார் 7 ஆண்டுக்குப் பிறகு 400 பேர் அடங்​கிய உயர்​நிலைக் குழு​வுடன் டெல்லி பிரிக்ஸ் உச்சி மாநாட்​டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்​கேற்​கிறார்.

இந்த ஆண்டு பிரிக்ஸ் கூட்​டமைப்​புக்கு இந்​தியா தலை​மையேற்று உள்​ளது. இதன்​படி வரும் செப்​டம்​பர் 12, 13-ம் தேதி​களில் டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடை​பெற உள்​ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உட்பட பிரிக்ஸ் கூட்​டமைப்​பின் அனைத்து நாடு​களின் தலை​வர்​களும் டெல்லி உச்சி மாநாட்​டில் பங்​கேற்​பதை உறுதி செய்​துள்​ளனர். சீன அதிபர் ஜி ஜின்​பிங் தரப்பில் அதி​காரப்​பூர்​வ​மாக எந்த தகவலும் வெளி​யிடப்​ப​டா​மல் உள்​ளது.

இந்த சூழலில் சீன துணை அதிபர் ஹான் ஜெங்​கை​ இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பெய்ஜிங்கில் நேற்று சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது பிரிக்ஸ் உச்சி மாநாட்​டில் சீன அதிபர் ஜி ஜின்​பிங் பங்​கேற்​பது குறித்து இரு தலை​வர்​களும் முக்​கிய ஆலோ​சனை நடத்​தி​ய​தாகக் கூறப்​படு​கிறது. இதன்​படி டெல்லி பிரிக்ஸ் உச்சி மாநாட்​டில் சீன அதிபர் ஜி ஜின்​பிங் பங்​கேற்​பார் என்று தகவல்​ வெளி​யாகி உள்​ளது.

இதுகுறித்து டெல்லி வட்​டாரங்​கள் கூறிய​தாவது: சீன அதிபர் ஜி ஜின்​பிங் கடந்த 2019-ம் ஆண்டு அக்​டோபரில் இந்​தி​யா​வில் சுற்றுப் பயணம் மேற்​கொண்​டார். அப்​போது பிரதமர் மோடி​யும் அதிபர் ஜி ஜின்​பிங்​கும் தமிழகத்​தின் மாமல்​லபுரத்​தில் சந்​தித்​துப் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். இதன்​பிறகு கடந்த 2020-ம்

ஆண்டு ஜூனில் லடாக்​கின் கல்​வான் பள்​ளத்​தாக்​கில் இந்​திய, சீன ராணுவ வீரர்​களிடையே மிகப்​பெரிய மோதல் ஏற்​பட்​டது. அப்​போது இரு நாடு​கள் இடையே போர் பதற்​றம் எழுந்​தது. பல்​வேறு கட்ட அமை​திப் பேச்​சு​வார்த்தை மூலம் போர் பதற்​றம் தணிக்கப்பட்​டு, லடாக் எல்​லை​யில் இயல்புநிலை திரும்​பியது.

இந்த சூழலில் தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவலின் பெய்​ஜிங் பயணத்​தில் சீன அதிபரின் டெல்லி வருகை உறுதி செய்யப்​பட்டு உள்​ளது. கடந்த 2019-ம் ஆண்​டில் அதிபர் ஜி ஜின்பிங் இந்​தி​யா​வுக்கு வருகை தந்​த​போது அவருடன் 200 பேர் அடங்​கிய உயர்​நிலைக் குழு வந்​தது. தற்​போது டெல்லி பிரிக்ஸ் உச்சி மாநாட்​டில் அதிபர் ஜின்​பிங்​குடன் 400 பேர் அடங்​கிய உயர்​நிலைக் குழு இந்​தி​யா​வுக்கு வருகை தர உள்​ளது.

அவர்​கள் தங்​கு​வதற்கு தேவை​யான ஓட்​டல்​களை தயார் செய்​வது தொடர்​பான நடவடிக்​கைகள் தொடங்​கப்​பட்டு விட்​டன. பிரதமர் மோடி​யும் அதிபர் ஜி ஜின்​பிங்​கும் தனி​யாக பேச்​சு​வார்த்தை நடத்து​வார்​கள். அப்​போது இருதரப்பு வர்த்​தகத்தை அதி​கரிப்​பது குறித்து ஆலோ​சிக்​கப்​படும். இவ்​வாறு டெல்லி வட்​டாரங்​கள் தெரிவித்​துள்​ளன.

சீன வெளி​யுறவுத் துறை பகிரங்​க​மாக அறிவிக்​க​வில்லை என்​ற​ போ​தி​லும் சீன அதிபரின் ஜி ஜின் ​பிங்​கின் டெல்லி வருகை உறுதி செய்​யப்​பட்டு விட்​டது. 7 ஆண்​டு​களுக்​குப் பிறகு அவர் மீண்​டும் இந்​தியா வரு​கிறார். இந்த வருகை முக்​கி​யத்​து​வம் வாய்ந்​த​தாக இருக்​கும்​ என்​று இந்​தி​ய வெளி​யுறவுத்​ துறை வட்​டாரங்​கள்​ தெரிவித்​துள்​ளன.

அஜித் தோவல் - வாங் யீ சந்திப்பு

எல்லை விவ​காரம் தொடர்​பாக இந்​தி​யா, சீனா இடையி​லான 25-வது சுற்றுப் பேச்​சு​வார்த்தை சீன தலைநகர் பெய்​ஜிங்​கில் நேற்று நடை​பெற்​றது. இதில் இந்​திய தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல், சீன வெளி​யுறவு அமைச்​சர் வாங் யீ ஆகியோர் பங்​கேற்​றனர். அருணாச்சல பிரதேசம், லடாக் உட்பட இரு நாடுகளின் எல்​லைப் பிரச்​சினை​கள் தொடர்​பாக கூட்​டத்​தில் விரிவாக விவா​திக்​கப்​பட்​டது.

இதுதொடர்​பாக சீன தலைநகர் பெய்​ஜிங்​கில் உள்ள இந்​திய தூதரகம் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “சீன வெளி​யுறவு அமைச்சரை, தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் செவ்வாய்க்​கிழமை சந்​தித்​துப் பேசி​னார். இந்த சந்​திப்​பின்​போது எல்லை​யில் அமை​தியை நிலை​நாட்ட வேண்​டும். இரு தரப்பு பொருளா​தார, அரசி​யல் உறவை வலுப்​படுத்த வேண்​டும் என முடிவு எடுக்கப்பட்டது” என்று தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது.

SCROLL FOR NEXT