கோப்புப் படம்

 
உலகம்

டெல்லி பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஜி ஜின்பிங் பங்கேற்பு: சீன அரசு உறுதி

மோகன் கணபதி

பெய்ஜிங்: டெல்லியில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்க உள்ளதை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது.

18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் வரும் 12 மற்றும் 13-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில், பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோபியா, இந்தியா, இந்தோனேஷியா, ஈரான், ரஷ்யா, சவூதி அரேபியா, தென் ஆப்ரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 11 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.

மேலும், பெலாரஸ், பொலிவியா, கியூபா, கஜகஸ்தான், மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து, உகாண்டா, உஸ்பெகிஸ்தான், வியட்நாம் ஆகிய 10 நட்பு நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பங்கேற்பார் என அந்நாடு ஏறகெனவே அறிவித்துள்ளது. இந்நிலையில், சீன அதிபரின் வருகையை அந்நாடு இன்று உறுதிப்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா செல்கிறார். அவர் செப்.12 மற்றும் 13-ம் தேதிகளில் நடைபெற உள்ள 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-ல் மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா - சீனா உச்சி மாநாட்டில் ஜி ஜின்பிங் பங்கேற்றார். அதன் பிறகு ஜி ஜின்பிங் இந்தியா வருவது இதுவே முதல் முறை. எல்லையில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே நிலவிய மோதல் போக்கு, இரு நாடுகளின் தொடர் முயற்சிகள் காரணமாக சீரடைந்ததை அடுத்து இந்த பயணம் அமைய உள்ளது.

சீன அதிபரின் இந்திய பயணம் குறித்து சீனாவின் குலோபல் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “பிரிக்ஸ் உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், சீன அதிபரின் இந்திய பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக இருக்கும். வர்த்தகம், இணைப்பு, காலநிலை மாற்றம், பொது சுகாதாரம், டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை இது மேலும் வலுப்படுத்தும்.

சீனாவும் இந்தியாவும் எதிரிகள் அல்ல; ஒத்துழைக்கும் கூட்டாளிகள். ஒன்றின் வளர்ச்சிக்கு மற்றொன்று ஒத்துழைப்பாக இருக்கும்; அச்சுறுத்தலாக இருக்காது என்று கடந்த ஆண்டு அதிபர் ஜி ஜின்பிங் பிரதமர் மோடியிடம் கூறினார். வரலாற்று ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள தொடர்பில் இருந்தே இந்த கண்ணோட்டம் வெளிப்பட்டுள்ளது. சீன - இந்திய எல்லையில் நிலவும் அமைதி, இரு நாடுகளின் கூட்டாண்மைக்குத் தேவையான அடித்தளத்தை வழங்குகிறது” என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT