சென்னை: நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் கடந்த 26-ம் தேதி இமயமலையில் பனிமலை உடைந்த காரணத்தால் பெருவெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ள பாதிப்புகளை சுட்டிக்காட்டும் சமூக வளைதள பதிவுகளை சீனா நீக்கி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த புதன்கிழமை அன்று நேபாளம் மற்றும் திபெத் நாட்டின் எல்லை பகுதியில் இமயமலையில் லாங்டாங் லிருங் சிகரத்தில் பனிமலை உடைந்து போடே கோசி, திரிசூலி, நாராயணி நதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் நேபாளத்தின் ரசுவா, தாதிங், நுவாகோட் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
வெள்ள பாதிப்பில் நேபாளத்தில் இதுவரை 700-க்கும் மேற்பட்டவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு உள்ளன. வெளிநாட்டினர் உட்பட 3,000-க் கும் மேற்பட்டோரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி நடைபெறுகிறது. அங்கு மீட்பு பணியில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவமனைகளில் மரண ஓலம், பாதிக்கப்பட்ட இடங்களில் தங்கள் உறவுகளை அடையாளம் காணும் நோக்கில் முகாமிட்டுள்ளவர்களின் தவிப்பு, வெள்ளத்தில் காணாமல் போனவர்களின் படங்கள் குறித்த அறிவிப்புகள் என நேபாளமே சோகத்தில் மூழ்கியுள்ளது. வெள்ளம் வந்தபோது அதில் சிக்கி மாயமான உள்நாட்டு மக்கள் குறித்த தரவுகள் முறையாக இல்லை என்ற தகவலும் கிடைத்துள்ளது. இதனால் இந்த இயற்கை பேரிடரின் பாதிப்பும், தாக்கமும் அதிகம் இருக்கும் என அஞ்சப்படுகிறது.
வெள்ள பாதிப்பு குறித்த பதிவுகளை நீக்கும் சீனா
இதற்கிடையில் ஊடக செய்திகள், சமூக வலைதள வீடியோ பதிவுகளில் நேபாள வெள்ளம் குறித்த பதிவுகள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது அதில் சிக்கி, மீட்கப்பட்டு, தாயகம் திரும்பிய தமிழர்களும் அந்த அனுபவத்தை அதிர்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
இந்த வெள்ள பாதிப்பு நேபாளம் மற்றும் திபெத் நாடுகளின் எல்லைப் பகுதியில் ஏற்பட்டது. இதில் திபெத் நாட்டை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், வெள்ள பாதிப்பு மற்றும் அதன் தாக்கத்தை திபெத் மக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவுகளாக பகிர்ந்திருந்தனர். அந்த பதிவுகளை சீன சமூக வலைதளங்களில் இருந்து அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு நீக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், மீட்புப் பணிகள் குறித்த பதிவுகள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருவதாக தகவல். சீன கம்யூனிஸ்ட் கட்சி அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை பலரையும் அதிர்ச்சி கொள்ள செய்துள்ளது.
வெள்ள பாதிப்பு தொடர்பாக திபெத் மக்கள் பகிர்ந்து வீடியோக்கள் சீன சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அது நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சீன அரசின் இத்தகைய நடவடிக்கை இந்த பேரிடர் பாதிப்பில் அதன் வெளிப்படைத்தன்மை குறித்த கேள்வியை எழுப்பி உள்ளது. இது குறித்து சர்வதேச நாடுகளின் ஊடக நிறுவனங்கள் கேள்வி எழுப்பி உள்ளன.
பலி எண்ணிக்கையில் வேறுபாடு
பெருவெள்ளத்தால் நேபாளத்தில் சுமார் 700-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அதுவே சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் பகுதியில் இந்த வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 என்று சீன தேசிய செய்தி முகமைகள் பதிவு செய்துள்ளன. மேலும், இதில் மாயமானவர்கள் குறித்த தகவலையும் சீனா குறைத்துள்ளதாக தகவல்.
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள நேபாள - திபெத் எல்லையில் வெள்ள பாதிப்பில் இருந்து தப்பித்த சுமார் 320 இந்தியர்கள் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதள பதிவுகளை சீன அரசு கட்டுப்படுத்துகின்ற காரணத்தால் மீட்பு பணியில் தொய்வு ஏற்படும் சூழல் இருப்பதாக புவிசார் அரசியல் வல்லுநர்கள் தங்களது கவலையை வெளிப்படுத்தி உள்ளனர்.