சீனாவின் திபெத் பகுதியில் இருந்தே நேபாளத்துக்குள் வெள்ளம் புகுந்திருக்கிறது. இதுகுறித்து சீன அரசு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என்று நேபாள அரசு வட்டாரங்கள் குற்றம்சாட்டி உள்ளன. எனினும் நேபாள அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக சீனா மீது புகார் தெரிவிக்கப்படவில்லை.
இதுகுறித்து நேபாளத்தில் செயல்படும் சீன தூதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெள்ளப்பெருக்கு குறித்து நேபாள அரசுக்கு சீனா முன்கூட்டிய தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுவது பொய் செய்தியாகும்.
திபெத் பகுதியில் கட்டப்படும் அணை உடைந்து நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது என்று கூறப்படுவதும் தவறான தகவல். நேபாள எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சிகரத்தில் பனிமலை உடைந்திருக்கிறது. இதற்கு நிலநடுக்கம் அல்லது நிலச்சரிவு காரணமாக இருக்கலாம். இந்த துயரமான நேரத்தில் குற்றச்சாட்டுகளைத் தவிர்த்து நிவாரண பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு சீன தூதரகம் தெரிவித்துள்ளது.