உலகம்

ஈரானுக்கு ராணுவ உதவியா? - சீனா திட்டவட்ட மறுப்பும் பின்புலமும்

எச்சரித்த ட்ரம்ப்புக்கு ‘வார்னிங்’

அனலி

பீஜிங்: ஈரானுக்கு சீனா ராணுவ உதவி செய்வதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியான நிலையில், அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது சீனா.

கடந்த மார்ச் 28-ம் தேதி, ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா இணைந்து தாக்குதலை தொடங்கின. ஒரு மாத காலத்துக்குப் பின்னர் 2 வார தற்காலிக போர் நிறுத்தம் அமலில் இருக்கிறது.

இந்தச் சூழலில், ஈரானுக்கு சீனா ராணுவ உதவி செய்வதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. அந்தத் தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளது சீனா. கூடவே, அதன் அடிப்படையில் அமெரிக்கா வரி விதிப்பில் ஈடுபடுமானால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.

          

இது தொடர்பாக, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “ஈரானுக்கு சீனா ராணுவ ரீதியிலான உதவிகளைச் செய்வதாக பல்வேறு ஊடகங்களிலும் தகவல் வெளியாகியுள்ளன. அந்தத் தகவல்களை அனைத்தும் சித்தரிக்கப்பட்டவை. இதன் அடிப்படையில், சீனா மீதான வரிகளை அமெரிக்கா அதிகப்படுத்தினால், சீனா தக்க பதிலடியைத் தரும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ஈரான் TEE-01B என்ற சீன செயற்கைக்கோளை வாங்கியுள்ளது. அதன்மூலம் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை துல்லியமாகக் குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது என்று ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து சீன வெளியுறவு அமைச்சகம் இந்த மறுப்பை அவசர அவசரமாகத் தெரிவித்துள்ளது.

முன்னதாக ட்ரம்ப்பிடம், “இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி சில நாடுகள் ஈரானுக்கு ஆயுத உதவிகளைச் செய்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளனவே?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ட்ரம்ப், “அவர்கள் (சீனா) அப்படிச் செய்யக்கூடும் என்ற சந்தேகம் எனக்கும் இருக்கிறது. ஒருவேளை அவர்கள் அவ்வாறு செய்தால், அவர்களுக்கு 50% வரி விதிப்பு நிச்சயம் உண்டு. சீனாவுக்கு மட்டுமல்ல ஈரானுக்கு போரில் உதவும் எவருக்கும் வரி விதிப்புகள் உண்டு” என்று கூறியிருந்தார். இந்நிலையில்தான் சீனாவின் மறுப்பு வெளியாகி முக்கியத்துவம் பெறுகிறது.

SCROLL FOR NEXT