கீவ்: உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் நின்றிருந்த சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய மாலுமிகள் இருவரை தேடும் பணி நடைபெறுகிறது.
ரஷ்யா-உக்ரைன் இடையே கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடங்கியதில் இருந்து இருதரப்புக்கு இடையே அடிக்கடி மோதல்கள் நடைபெறுகிறது. சில நாட்களுக்கு முன், உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் நான்கு இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர். இதற்கு ரஷ்ய தூதரை நேரில் வர வழைத்து இந்தியா தனது பலத்த எதிர்ப்பை தெரிவித்தது.
ரஷ்யா - உக்ரைன் இடையே தாக்குதல் தொடர்வதால், கருங்கடல் பகுதியில் உள்ள கப்பல்களில் பணிபுரியும் இந்திய மாலுமிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி இந்தியா அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில் ஒடேசா துறைமுகத்தில், ‘எம்வி ஏஜிஎன் ரகனர்’ என்ற கப்பல் மீது நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த கப்பலில் இந்திய மாலுமிகள் 4 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் இருவரின் பாதுகாப்பை உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் உறுதி செய்துள்ளது. மற்ற 2 மாலுமிகளைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.