கலிபோர்னியா ஆளுநர் கேவின் நியூஸம்

 
உலகம்

ஏஐ அச்சுறுத்தலை கையாள்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள கலிபோர்னியா ஆளுநர் உத்தரவு

வேட்டையன்

கலிபோர்னியா: மனித குலத்துக்கு ஏஐ (செயற்கை நுண்ணறிவு) நுட்பத்தால் பாதுகாப்பு அச்சுறுத்தல் எழுந்துள்ள நிலையில் ஏஐ அச்சுறுத்தலை கையாள்வதற்கான நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவின் கலிபோர்னியா ஆளுநர் கேவின் நியூஸம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

2028-ல் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் முகமாக கேவின் பார்க்கப்படுகிறார். இந்நிலையில், ஆட்சியில் உள்ள அதிபர் ட்ரம்ப், ஏஐ பாதுகாப்பு சார்ந்த எந்தவித நடவடிக்கையையும் முன்னெடுக்காத சூழலில், அதை தான் முன்னெடுத்துள்ளதாக கேவின் கூறியுள்ளார்.

“முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளே ஏஐ சார்ந்த ஒழுங்குமுறை வேண்டும் என்று கூறி வருகின்றனர். இருப்பினும் இதில் அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, குறைந்தபட்சம் அதனை மேற்பார்வையிட கூட முன்வரவில்லை.

இந்நிலையில், ஏஐ அச்சுறுத்தலை கையாள்வதற்கான நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளேன்.

இதன் மூலம் நாட்டிலேயே முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்புச் சோதனைகளின் மீது சுதந்திரமான மேற்பார்வையை நிறுவ முடியும். அது புதிய சட்டத்தை இயற்றவும் வழிவகுக்கும். இதோடு, ஏஐ ‘கில் ஸ்விட்ச்’ உருவாக்கும் பணியையும் முன்னெடுக்குமாறு கூறியுள்ளேன்” என கேவின் தெரிவித்துள்ளார்.

அதென்ன கில் ஸ்விட்ச்?

ஏஐ இயக்கம் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறும் போதோ அல்லது அவை செயலிழக்கும் போதோ அதை கட்டுப்படுத்தும் அம்சமத்தை தான் ‘கில் ஸ்விட்ச்’ என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் ஏஐ சிஸ்டத்தின் இயக்கத்தை நிறுத்த முடியும் என தகவல்.

“செயற்கை நுண்ணறிவு மனித குலத்தையே அழித்துவிடும்” என்று எலான் மஸ்க், டேரியோ அமோடி (ஆந்த்ரோபிக் சிஇஓ), சாம் அல்ட்மேன் (ஓபன் ஏஐ சிஇஓ) ஆகியோர் எச்சரித்த நிலையில் கேவின் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கலிபோர்னியாவில் உள்ள சிலிகான் வேலியில் உலகின் முன்னணி டெக் மற்றும் ஏஐ துறை சார்ந்த நிறுவனங்கள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT