ஹொடைடா, ஏமன்: செங்கடலில் ஏமன் நாட்டு கடற்கரைக்கு அருகே சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல் ஒன்று, அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய மர்மக் கொள்ளையர் கும்பலால் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக பிரிட்டன் ராணுவம் நேற்று தெரிவித்துள்ளது.
ஏமனின் கடலோர நகரமான ஹொடைடாவிற்கு தென்மேற்கே 30 கடல் மைல் (சுமார் 55 கிலோமீட்டர்) தொலைவில் இத்தாக்குதல் நடந்துள்ளதாக பிரிட்டன் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. தங்களுக்கு நேர்ந்த இந்தத் தாக்குதல் குறித்து கப்பல் ஊழியர்களே அதிகாரப்பூர்வமாகத் தகவல் தெரிவித்துள்ளனர்.
எனினும், பாதிக்கப்பட்ட கப்பலின் பெயர், அதில் பயணித்தவர்கள் மற்றும் சேத விவரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இதுகுறித்த விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தத் தாக்குதலுக்கு நேற்று பிற்பகல் வரை எந்தவொரு ஆயுதக் குழுவும் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்கவில்லை.
இந்த பகுதி ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக எச்சரித்திருந்த போதிலும், அவர்கள் அதை இதுவரை செய்ததாக தகவல் இல்லை.
கடந்த காலத்தில் காசா போர் தொடங்கியதிலிருந்து, செங்கடல் பாப் அல்-மந்தாப் நீரிணையை ஒட்டிய முக்கிய நீர்வழிப் பாதை பகுதியில் ஹவுதிகள் பலமுறை ட்ரோன், ஏவுகணைகள் மூலம் சரக்கு கப்பல்களைத் தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலால் பல கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள், சூயஸ் கால்வாய் வழியாகச் செல்வதற்குப் பதிலாக, ஆப்பிரிக்காவின் குட் ஹோப் முனையை சுற்றி தங்கள் கப்பல்களை மாற்றி அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்கிடையில், சோமாலிய கடற்கொள்ளையர்களும் இந்த கடற்பகுதிக்கு அடுத்துள்ள ஏடன் வளைகுடா பகுதிகளில் தங்களது கைவரிசையைக் காட்டி வருகின்றனர்.