துபாய்: அமெரிக்க படைத்தளம் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே உள்ள கட்டிடம் சேதமடைந்துள்ளது.
இதை புகைப்படம் எடுத்துப் பகிர்ந்ததாக 25 வயதுடைய பிரிட்டன் விமானப் பணிப்பெண் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். ‘மிடில் ஈஸ்ட் ஐ’ செய்தியின்படி, அந்தப் பெண் ஒரு வாட்ஸ்அப் குழுவில் அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து, விமான நிலையம் வழியாகச் செல்வது பாதுகாப்பானதா என்று சக ஊழியர்களிடம் கேட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நாட்டின் கடுமையான சைபர் கிரைம் சட்டங்களின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 54,000 டாலர் அபராதம் விதிக்கப்படலாம்.
அதனைத் தொடர்ந்து அவர் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார். இதற்கிடையில், பாதுகாப்பு தொடர்பான முக்கியமான காட்சிகளைப் படம்பிடிக்கவோ அல்லது பகிரவோ வேண்டாம் என்று பிரிட்டன் மற்றும் இந்தியத் தூதரகங்கள் தங்களது நாட்டு குடிமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளன.