உலகம்

இந்தப் பக்கம் புதின், ஜி ஜின்பிங், அந்தப் பக்கம் ட்ரம்ப்... பிரிக்ஸ் 2026-ல் இந்திய ‘ராஜதந்திர சமநிலை’ எப்படி?

போத்தி ராஜ்.க

“இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எந்தவொரு நாட்டின் அழுத்தத்துக்கும் கட்டுப்பட்டதல்ல. அது, 140 கோடி இந்தியர்களின் நலனை மட்டுமே சார்ந்தது.” - இந்த ஒற்றை வரியில்தான் தற்போதைய இந்தியாவின் உலக அரசியல் இயங்குகிறது.

டெல்லியில் நடைபெறும் 18-வது பிரிக்ஸ் மாநாடு வெறும் தலைவர்கள் சந்திக்கும் களமல்ல. வல்லரசுகளின் பிடியில் சிக்காமல் சொந்த பாதையை வகுக்கும் இந்தியாவின் வல்லமையை வெளிப்படுத்தும் மேடையாகும்.

ரஷ்யாவின் மலிவான கச்சா எண்ணெய், அமெரிக்காவின் பாதுகாப்புத் தொழில்நுட்ப உதவி, சீனாவின் வர்த்தகச் சந்தை ஆகிய மூன்றையும் இழந்துவிடக் கூடாது என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.

உக்ரைன் போரினால் தடைகளை எதிர்கொள்ளும் ரஷ்யா, எல்லையில் அழுத்தம் தரும் சீனா, ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆகிய மூன்று துருவங்களையும் ஒரே நேரத்தில் இந்தியப் பிரதமர் மோடி கையாள்வது சாதாரண ராஜதந்திரம் அல்ல.

இரு புகைப்படங்கள் உணர்த்தும் செய்தி

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிலும், டெல்லியில் தொடங்கப்பட்ட பிரிக்ஸ் மாநாட்டிலும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சர்வதேச அரசியலில் கவனம் ஈர்த்துள்ளன. அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்துவது, எந்தவொரு குறிப்பிட்ட கூட்டணியிலும் இணையாமல் இருப்பது, வாய்ப்புகளைத் திறந்து வைத்திருப்பது ஆகியவை இந்தியாவின் நீண்டகால ராஜதந்திரமாகும்.

‘குளோபல் சவுத்’ மற்றும் பிரிக்ஸ்

பிரிக்ஸ் அமைப்பு முதலில் பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் தொடங்கியது. பின்னர் தென் ஆப்பிரிக்காவையும் இணைத்து, தற்போது ‘குளோபல் சவுத்’ (Global South) எனப்படும் வளரும் நாடுகளின் பரந்த தளமாக விரிவடைந்துள்ளது.

அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகியவற்றுடன் பல்வேறுப்பட்ட உறவுகளைக் கொண்ட நாடுகள் இதில் இடம்பெற்றுள்ளன. ‘குளோபல் சவுத்’ அமைப்பில் பொருளாதார பலமும் ராணுவ வலிமையும் கொண்ட சீனா தனித்து ஆதிக்கம் செலுத்திவிடக் கூடாது என்பதிலும் இந்தியா கவனத்துடன் காய்களை நகர்த்தி வருகிறது.

ரஷ்யா: இழக்க முடியாத பாரம்பரிய நட்பு

பனிப்போர் காலத்தில் இருந்து இந்தியாவின் நம்பிக்கைக்குரிய, ராஜதந்திர உறவுகளுக்குப் பக்கபலமாக இருக்கும் நண்பன் ரஷ்யா. பாதுகாப்புத் தளவாடங்கள், தொழில்நுட்ப வசதிகள், அணுசக்தி உதவி மற்றும் கச்சா எண்ணெய் வழங்குவதில் இந்தியாவுக்கு ரஷ்யா மிக முக்கியப் பங்காற்றி வருகிறது.

இந்தியாவும் ரஷ்யாவும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் தங்களின் சொந்த நாணயப் பரிமாற்றத்தை முன்னெடுத்ததன் மூலம், இருநாட்டு வர்த்தகமும் 96 சதவீதம் எளிதாகியுள்ளதாக இரு அரசுகளும் தெரிவித்துள்ளன. மேற்கத்திய நாடுகளால் ரஷ்யாவுக்கு ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்களைச் சமாளிக்க இந்தச் செலுத்தல் முறை இரு நாடுகளுக்குமே உதவுகிறது.

எனவே, இந்தியாவைப் பொறுத்தவரை ரஷ்யாவுடன் நட்புறவைப் பராமரிப்பது என்பது விளாடிமிர் புதினை மகிழ்ச்சியாக வைத்திருப்பது மட்டுமல்ல; அது எரிசக்திப் பாதுகாப்பு, ராணுவத் தளவாடங்கள் மற்றும் சர்வதேசச் செல்வாக்கு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

சீனா: தவிர்க்க முடியாத கூட்டாளி

இமயமலை எல்லைப் பிரச்சினை மற்றும் 2020 கல்வான் மோதலால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. 7 ஆண்டுகாலத் தேக்கத்துக்குப் பின் பேச்சுவார்த்தைகள் துளிர்த்துள்ளன.

ஷாங்காய் மாநாட்டில் மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பின்போது யுபிஐ (UPI) மற்றும் அலிபே (Alipay) இணைக்கத் திட்டமிடப்பட்டாலும், தகவல் பாதுகாப்பு அச்சத்தால் இந்தியா இன்னும் அதைச் செயல்படுத்தவில்லை. பிரிக்ஸ் அமைப்பில் சீனா தனித்து ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்கவும், வர்த்தகத் தேவைக்காகவுமே இந்தியா இந்தத் தொடர்பைப் பேணுகிறது.

அமெரிக்காவுடன் கசக்காத உறவு

டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றுள்ள சூழலில், ‘அமெரிக்கா முதன்மை’ கொள்கை வர்த்தகச் சவால்களை உருவாக்கினாலும், அமெரிக்காவுடனான உறவை இந்தியா வலுவாக நகர்த்துகிறது. இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவைச் சமாளிக்க ‘குவாட்’ (QUAD) கூட்டமைப்பில் இரு நாடுகளும் இணைந்து இயங்குகின்றன.

கடந்த 10 ஆண்டுகளில் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை அமெரிக்காவுடன் இந்தியா சிறப்பாகக் கையாண்டு வருகிறது. இதன் காரணமாக அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு, அதிகமான ஏற்றுமதிக்கான சந்தையாக அமெரிக்கா திகழ்கிறது. செமிகண்டெக்டர்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் இருதரப்பு கூட்டு தொடர்கிறது.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா விரும்பவில்லை என்றாலும், அதற்காக ரஷ்யாவுடனான நட்பை இந்தியா விடவில்லை. பிரிக்ஸ் கூட்டமைப்பை ரஷ்யாவும் சீனாவும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான அமைப்பாக மாற்ற முயலும்போது, இந்தியா அதனை “மேற்கத்திய எதிர்ப்பு அல்லாத, ஆனால் மேற்கத்திய சார்பற்ற” (Non-Western, not Anti-Western) சர்வதேச மேடையாகவே உலகுக்கு வெளிப்படுத்துகிறது.

இந்தியாவுக்குக் கிடைக்கும் பலன்கள்:

 பொருளாதாரப் பாதுகாப்பு:

ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் பெறுவதன் மூலம் உள்நாட்டில் எரிபொருள் விலை கட்டுப்படுத்தப்படுகிறது. அதேநேரத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து நேரடி அந்நிய முதலீடுகள் ஈர்க்கப்படுகின்றன.

பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம்:

ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணை அமைப்புகளையும், அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன போர் விமான என்ஜின்கள் மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களையும் ஒரே நேரத்தில் பெற முடிகிறது.

'குளோபல் சவுத்' தலைமை:

உலகின் தெற்குப் பகுதி நாடுகளின் தலைமையாக இந்தியா உருவெடுத்து வருகிறது. இந்த வளர்ச்சி பிரிக்ஸ் மற்றும் ஜி20 அமைப்புகளில் வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளுக்கான பிரதிநிதித்துவத்தைப் பெற்றுத் தருகிறது.

நாணயச் சமநிலை:

அமெரிக்க டாலரையே முழுமையாக சார்ந்திருப்பத்தைக் குறைத்து இந்திய ரூபாய் மூலம் வர்த்தகம் செய்ய ஒப்பந்தங்கள் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்குள் நடக்கின்றன. இதனால், இந்தியாவுக்கு டாலரைச் சார்ந்திருக்கும் நிலை குறையும்.

 பிரிக்ஸ் நாணயம் உருவாகுமா?

மேற்கத்திய தடைகளால் புதின் மற்றும் ஜி ஜின்பிங் ‘டாலர் நீக்க’ முயற்சியாக ஒரு பொதுவான ‘பிரிக்ஸ் நாணயத்தை’ உருவாக்க முயல்கின்றனர். ஆனால், இந்தியா இதனை ஆதரிக்கவில்லை. இது பொருளாதார ரீதியாகச் சாத்தியமற்றது என்றும், அமெரிக்காவை ஆத்திரமூட்டும் செயல் என்றும் கருதுகிறது. புதிய பிரிக்ஸ் கரன்சிக்கு பதிலாக, உறுப்பு நாடுகள் தங்களின் சொந்த கரன்சியில் (Local Currencies) வர்த்தகம் செய்வதையே இந்தியா ஆதரிக்கிறது.

SCROLL FOR NEXT