வியட்நாமின் பூகுவோக் தீவு அருகே கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 15 இந்திய சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். 21 பேர் பத்திரமாக மீட்கப் பட்டனர். அவர்களுக்கு அவசரகால சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஹனோய்: வியட்நாம் நாட்டின் பூகுவோக் தீவுக்கு அருகே கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 தமிழர்கள் உட்பட 15 இந்திய சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். செல்போன் நிறுவனம் தனது விநியோகஸ்தர்களை சிறப்பு சுற்றுலா அழைத்துச் சென்றபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமின் அன்ஜியாங் மாகாணத்தில் பூகுவோக் தீவு அமைந்துள்ளது. இந்தியாவில் இருந்து 32 சுற்றுலா பயணிகள் சில நாட்களுக்கு முன்பு இந்த தீவுக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அங்கிருந்து மே ரட் நகோய் என்ற தீவுக்கு அவர்கள் நேற்று படகில் சென்றனர். படகில் மாலுமி உட்பட 4 ஊழியர் இருந்தனர். பிற்பகல் 1 மணி அளவில் (இந்திய நேரப்படி காலை 11.30) படகின் இன்ஜினில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. அலைகளின் சீற்றமும் அதிகம் இருந்ததால் படகு தலைகுப்புற கவிழ்ந்தது. படகில் இருந்த அனைவரும் கடலில் விழுந்து தத்தளித்தனர்.
இதைப் பார்த்து, அருகில் சென்ற சுற்றுலா படகுகளை சேர்ந்த மாலுமிகள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். வியட்நாம் கடற்படை, கடலோரக் காவல் படை வீரர்களும் படகுகளில் விரைந்து சென்றனர். கடலில் தத்தளித்த 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் 13 ஆண்கள்,2 பெண்கள் என இந்திய சுற்றுலாபயணிகள் 15 பேர் உயிரிழந்தனர். இதில் 10 பேர் தமிழர்கள். சென்னை அகரம் எஸ்ஆர்பி கோயில் தெற்கு தெருவைச் சேர்ந்த சந்தோஷ் குமார், கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை பாபு, திருச்சி பீமநகர் யானைகட்டி மைதானத்தைச் சேர்ந்த சேர்ந்த ஷேக் அப்துல்லா(52), திருவானைக்காவல் அடுத்த கீழக்கொண்டயம்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி (45), கிராப்பட்டி அருணாசலம் நகரைச் சேர்ந்த அழகுராஜன்(38), சேலம்
அழகாபுரம் ராமகிருஷ்ணா சாலையைச் சேர்ந்த ஸ்ரீதர் (62), தருமபுரி மாவட்டம் கடத்தூர் செந்தில்குமார் (45), திண்டுக்கல் மாவட்டம் பழநியை அடுத்த சிவகிரிப்பட்டி முருகபிரபு (43), வேலூர் சைதாப்பேட்டை கன்னிகா பரமேஸ்வரி கோயில் தெரு வினய்குமார், திருவண்ணாமலை ரவிசங்கர் ஆகிய 10 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திராவைச் சேர்ந்த நல்லபேட்டை ஆதிசேஷய்யா, கடப்பா ஸ்ரீதர், மசூலிப்பட்டினம் ஜெயலட்சுமி, கேரளாவைச் சேர்ந்த அவிகோட் செரியன், லவேனி ஆகியோரும் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்த முருகபிரபுவின் நண்பரான பழநியைச் சேர்ந்த நிர்மல்குமாரும் (42) வியட்நாமுக்கு சென்றுள்ளார். இவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த பாலாஜியின் சித்தப்பா கோவிந்தன் உள்ளிட்ட குடும்பத்தினர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியபோது, ‘‘படகில் பயணித்த யாருக்கும் உயிர் காக்கும் லைஃப் ஜாக்கெட் தரப்படவில்லை என்று எங்களிடம் பேசியவர்கள் தெரிவித்தனர். இதனால்தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது’’ என்றனர்.
உயிரிழந்த செந்தில்குமார், அழகுராஜன், பாலாஜி, பாபு, முருகபிரபு, ரவிசங்கர், ஸ்ரீதர், வினய்குமார், ஷேக் அப்துல்லா.
மீட்கப்பட்ட நிர்மல்குமார் கூறும் போது, “படகில் சுமார் 39 பேர் வரை இருந்திருக்கலாம். அதில் பலரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். கடல் சீற்றம் மற்றும் படகில் அதிக பயணிகள் இருந்ததால்தான் விபத்து நேரிட்டது’’ என்றார்.
உயிர் தப்பிய தமிழர்: பிரேம்குமார் கூறும்போது, “காலையில் ஒரு தீவுக்கு சென்றோம். அங்கிருந்து மதிய உணவுக்காக மற்றொரு தீவுக்குச் சென்றபோது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்தது’’ என்றார். மீட்கப்பட்டவர்கள் பூகுவோக் தீவில்உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயர்நிலை விசாரணைக்கு உத்தரவு: ‘‘மே ரட் நகோய் தீவை நெருங்குவதற்கு சுமார் 400 மீட்டர் தூரம் இருந்த நிலையில், படகு கவிழ்ந்துள்ளது. படகு விபத்து குறித்து உயர்நிலை விசாரணைக்கு வியட்நாம் அரசு உத்தரவிட்டுள்ளது’’ என்று வியட்நாம் கடலோரக் காவல் படையினர் கூறினர். உத்தர பிரதேசத்தின் நொய்டாவை தலைமையிடமாகக் கொண்ட லாவா மொபைல்ஸ் நிறுவனம், தனது விநியோகஸ்தர்களுக்காக சிறப்பு சுற்றுலாவை ஏற்பாடு செய்தது. இதன்படி அந்த நிறுவனத்தின் விநியோகஸ்தர்கள் வியட்நாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் படகு விபத்தில் உயிரிழந்துள்ளனர். இதற்கு லாவா மொபைல்ஸ் கவலையும், வேதனையும் தெரிவித்துள்ளது.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
‘விபத்தில் சிக்கிய தமிழர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்யும் வகையில் தமிழக அரசு அதிகாரிகள், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரக உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழகம் கொண்டு வர தூதரகம் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளேன்’ என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
படகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அயலகத் தமிழர் நலத்துறை இயக்குநரகம் வெளி
யிட்ட செய்திக்குறிப்பு: விபத்தில் சிக்கிய தமிழர்களின் விவரங்களைப் பெற்று, அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளை உடனே வழங்குமாறு துறை அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தினார். முதல்கட்டமாக வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரகத்தை தொடர்புகொண்டு, விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு அவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அங்குள்ள தமிழ்ச் சங்கங்களைத் தொடர்புகொண்டும் தமிழர்களின் விவரங்கள் குறித்து விசாரிக்கப்பட்டுவருகிறது.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் மற்றும் தேவையான உதவிகளை வழங்க வியட்நாம் ஹோசிமின் நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திலும், ஹனோயிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. +84 36 281 7930, +84 91 552 37 14, +84 33 452 0414, +84 91 308 9165 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் 24 மணி நேர இலவச உதவி மையத்தை இந்தியாவுக்குள் 1800 309 3793, வெளிநாடு தொடர்புக்கு +91 80 6900 9900, நேரடி தொடர்புக்கு +91 80 6900 9901 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் வியட்நாமுக்கு சேலம் சரக டிஐஜி சந்தோஷ் ஹடிமானி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.