உலகம்

வியட்நாமில் புறப்​பட்ட 300 மீட்டர் தொலை​வுக்​குள் விபத்தில் சிக்கிய படகு: நேரில் பார்த்​த இந்தியர் அதிர்ச்சி தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தெற்கு வியட்நாம் தீவுப் பகு​தி​யில் சனிக்கிழமையன்று இந்​திய சுற்​றுலாப் பயணி​களை ஏற்​றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 15 பேர் உயி​ரிழந்​தனர். கரைப்பகுதியில் இருந்து புறப்​பட்ட சில நிமிடங்​களி​லேயே, வெறும் 300 மீட்​டர் தொலை​விற்​குள் படகு கவிழ்ந்​த​தாக நேரில் பார்த்த ஒரு​வர் தெரிவித்துள்​ளார்.

ஆந்​திர மாநிலம் குண்​டூரைச் சேர்ந்​தவர் ஆசிஷ் குமார் (48). செல்போன் விநி​யோகஸ்​த​ராகப் பணி​யாற்றி வரு​ம் அவர் விபத்து குறித்து கூறிய​தாவது: நாங்​கள் அனை​வரும் ‘லாவா மொபைல்’ நிறு​வனத்​தின் விற்​பனை​யாளர்​கள், விநி​யோகஸ்​தர்​கள் மற்​றும் ஊழியர்​கள். நிறு​வனத்​தின் வரு​டாந்​திர சுற்​றுலா​வுக்​காக வியட்நாம் சென்​றிருந்​தோம்.

இந்த நிலை​யில், வியட்​நாமின் ‘ஹான் மே ரட் நிகோய்’ தீவிலிருந்து மற்​றொரு தீவுக்​குச் செல்​வதற்​காக சுற்​றுலாப் பயணிகள் மூன்று குழுக்​களாகப் பிரிக்​கப்​பட்​டனர். அதில் 32 இந்தி​யர்​களை ஏற்​றிச் சென்ற முதல் படகு புறப்​பட்ட சில நிமிடங்களி​லேயே தலைகுப்​புற கவிழ்ந்து விபத்து ஏற்​பட்​டது. மற்ற இரு குழு​வினரும் தீவிலேயே நின்று புகைப்​படம் எடுத்​துக் கொண்டிருந்தோம். அப்​போது​தான் இந்​தத் துயரம் அரங்​கேறியது.

படகு புறப்​பட்டு வெறும் 300 மீட்​டர் தூரம் கூடச் சென்​றிருக்​காது. துர​திர்​ஷ்ட​வச​மாக அதற்​குள் திடீரென கவிழ்ந்​து​விட்​டது. நாங்​கள் புகைப்​படம் எடுத்​துக் கொண்​டிருந்​த​தால், என்ன நடக்​கிறது என்று சுதா​ரிப்​ப​தற்​குள் அனைத்​தும் முடிந்​து​விட்​டது. தீவை விட்டுப் படகு நகர்ந்த உடனேயே இந்த விபத்து நடந்​த​தால், கரையில் இருந்த நாங்​கள் அனை​வரும் உதவிக்​காகக் கூச்சலிட்டோம். அப்​போது வானிலை மோச​மாக இல்​லை.

காற்று வீச்​சும் சாதாரண அளவில்தான் இருந்​தது. உடனடி​யாக மீட்​பு குழுவினர் சம்பவ இடத்​திற்கு விரைந்து வந்​து, விபத்​தில் சிக்கிய​வர்​களை​யும், உடல்​களை​யும் கரைக்​குக் கொண்டு வந்தனர். ஆனால், அங்கு அவர்​களுக்கு முதலுதவி அளிப்​ப​தற்​குக் கூட மருத்​து​வக் குழு​வினர் யாரும் உடனடி​யாக வரவில்​லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே, 15 இந்​தி​யர்​கள் உயிரிழந்த இந்த விபத்து தொடர்​பாக படகின் கேப்​டனை கைது செய்​துள்ள போலீ​ஸார் பாது​காப்பு விதி​மீறல்​கள் தொடர்​பாக அவரிடம் தீவிர விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT