வாஷிங்டன்: ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கும் மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்க அதிகாரம் அளிக்கும் புதிய தடைகள் மசோதாவுக்கு அமெரிக்க செனட் சபை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மசோதாவுக்கு லிண்ட்சே ஓ.கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026 என்று பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நேற்று முன்தினம் செனட் சபையில் 86-11 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் ஆற்றல் வளங்களை அதிகம் வாங்கும் முதல் 5 நாடுகளை இலக்காகக் கொண்டு இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா, சீனா, அஜர்பைஜான், ஹங்கேரி, ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. உக்ரைன் மீதான போரை நிறுத்துவதற்கும், ரஷ்யாவுக்கான நிதி ஆதாரங்களை முடக்குவதற்கும், இந்த நாடுகளின் ஏற்றுமதி பொருட்கள் மீது 100% வரை வரிகளை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு இம்மசோதா முழு அதிகாரம் அளிக்கிறது.
இந்தியா, சீனா உள்ளிட்ட பொருட்கள் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும்போது அந்தப் பொருட்களுக்கு 100 சதவீத வரிவிதிக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.
அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்பட்டால், இந்தியப் பொருட்களின் விலை உயர்ந்து அமெரிக்கச் சந்தையில் கடும் போட்டியைச் சந்திக்க நேரிடும்.