நியூயார்க்: மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பிய பேங்க் ஆப் அமெரிக்காவின் பெண் துணைத் தலைவர் நியூயார்க் டைம்ஸ் சதுக்கப் பகுதியில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். தாக்குதல் நடத்திய மனநலப் பாதிப்புள்ள பெண்ணைக் காவல் துறை சுட்டு வீழ்த்தியது.
அமெரிக்காவின் நியூஜெர்சியைச் சேர்ந்த எரின் பியசெண்டி (32), பேங்க் ஆப் அமெரிக்கா வங்கியின் துணைத் தலைவராகப் பணியாற்றி வந்தார். மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பிய இவர், நேற்று மேற்கு 42-வது தெரு சந்திப்பில் இருந்தார். அப்போது, பமேலா சிஸ்நெரோஸ் (49) என்ற பெண் இரு பெரிய சமையலறைக் கத்திகளுடன் அங்கிருந்த பொதுமக்கள் மீது திடீரெனத் தாக்குதல் நடத்தினார். இதில் எரின் பியசெண்டி படுகாயமடைந்து உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், டேசர் (மின்சார அதிர்ச்சித் துப்பாக்கி) மூலம் சிஸ்நெரோஸைக் கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால், அவர் கத்திகளுடன் அதிகாரிகளை நோக்கி முன்னேறியதால் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து நியூயார்க் காவல் துறை ஆணையர் ஜெசிகா டிஷ் கூறும்போது, “இது எவ்வித காரணமுமின்றி நடத்தப்பட்ட தாக்குதல். சிஸ்நெரோஸுக்கு ஏற்கெனவே மனநலப் பாதிப்புகள் இருந்ததாகக் காவல் துறையின் பதிவுகள் காட்டுகின்றன” என்றார். இச்சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள பேங்க் ஆப் அமெரிக்கா நிறுவனம், “எங்களது சிறந்த சக ஊழியரின் இழப்பு பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளது.