இஷ்ராக் உசேன்
டாக்கா: வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள சேரிப் பகுதியில் கையில் துப்பாக்கியுடன் சென்று போதைப்பொருள் விற்பனை மையத்தில் அந்நாட்டு ராணுவ அமைச்சர் இஷ்ராக் உசேன் சோதனை நடத்தியது சமூகவலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானின் வங்கதேச தேசியவாதக் கட்சி(பிஎன்பி) நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ராணுவ அமைச்சராக இருப்பவர் இஷ்ராக் உசேன் (39). இவர் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார்.
அதில், கெண்டாரியா ரயில் நிலையத்தின் அருகே வாகனத்திலிருந்து இறங்கும் அவர், ஒரு கையில் ஒலிபெருக்கியும் மறுகையில் துப்பாக்கியும் ஏந்தியபடி சிலரை விரட்டிச் செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அப்போது அங்கிருந்த கும்பலை நோக்கி, “முழு நகரத்தையும் சீரழிக்கிறீர்கள்; ஒட்டுமொத்தப் பகுதியையும் நாசமாக்குகிறீர்கள்” என்று அந்த அமைச்சர் கண்டி்ப்பது பதிவாகியுள்ளது.
இதுகுறித்து டாக்கா பெருநகர காவல் துறையின் கூடுதல் துணை ஆணையர் மசூத் ரானா கூறும்போது, “இந்த சோதனை குறித்து அமைச்சர் எங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கவில்லை. சம்பவம் முடிந்தபிறகே எங்களுக்குத் தெரியவந்தது” என்றார்.
கெண்டாரியா காவல் நிலைய அதிகாரி மொனிருஜாமான் மொனி கூறும்போது, “பிடிபட்ட 6 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தோம். அவர்களிடம் இருந்து ஒருவிதப் பொடி கைப்பற்றப்பட்டுள்ளது. அது போதைப்பொருளா என்பதை உறுதிப்படுத்த் சோதனைக்கு அனுப்பப்படும்” என்றார்.
அதிரடி தொடரும்
இந்தச் சோதனையின் வீடியோவைப் பகிர்ந்துள்ள அமைச்சர் இஷ்ராக் உசேன், “இஷ்ராக்கின் அதிரடி நடவடிக்கை: போதைப்பொருள் மையங்கள் தகர்ப்பு - வியாபாரிகள் போலீஸாரிடம் ஒப்படைப்பு” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது தொகுதிக்குட்பட்ட நகரப் பகுதிகளில் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு, என் தொகுதியை போதைப்பொருள் அற்ற பகுதியாக மாற்றுவேன்” என்று உறுதியளித்துள்ளார்.