வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ்

 
உலகம்

சிறுபான்மையினருக்கு எதிராக நடந்த சம்பவங்கள் பலவும் மதம் சாராதவை: வங்கதேச அரசு

மோகன் கணபதி

டாக்கா: வங்கதேசத்தில் கடந்த ஆண்டு சிறுபான்மையினருக்கு எதிராக நடந்த சம்பவங்கள் பலவும் மதம் சாராதவை என்றும், அதேநேரத்தில் மதம் சார்ந்த வன்முறைச் சம்பவங்களும் பதிவாகி உள்ளன என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

வங்கதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா அரசாங்கம் கவிழ்ந்ததில் இருந்து அந்நாட்டில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்திய அரசும் இது தொடர்பாக தனது கவலையை வங்கதேச அரசுக்கு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களில் பெரும்பாலானவை மதம் சாராதவை என அந்நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸின் பத்திரிகைப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக முகம்மது யூனுஸின் பத்திரிகைப் பிரிவு வெளியிட்டுள்ள பதிவில், ‘கடந்த 2025-ம் ஆண்டில் ஜனவரி முதல் டிசம்பர் வரை வங்கதேசம் முழுவதும் சிறுபான்மையினருக்கு எதிராக மொத்தம் 645 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு சம்பவமும் கவலைக்குரியவைதான். என்றாலும், இந்த தரவுகள் ஒரு தெளிவான மற்றும் ஆதாரத்தின் அடிப்படையிலான சித்திரத்தை வழங்குகின்றன. இவற்றில் பெரும்பாலான வழக்குகள் மதம் சார்ந்ததாக இல்லாமல், குற்றம் சார்ந்ததாக இருந்தன.

பதிவு செய்யப்பட்டுள்ள 645 சம்பவங்களில் 71 சம்பவங்கள் மதம் சார்ந்தவை என்பதற்கான ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில், 38 வழக்குகள் கோயில்களை சேதப்படுத்தியது தொடர்பானவை. 23 வழக்குகள், சிலைகளை உடைப்பதாக அச்சுறுத்தியது, சிறுபான்மையினருக்கு எதிராக சமூக ஊடகங்களில் பதிவிட்டது, வழிபாட்டு மண்டபங்களுக்கு சேதம் விளைவித்தது போன்றவை.

இந்தச் சம்பவங்களில் 50 சம்பவங்கள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற 21 வழக்குகளில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மற்ற 574 சம்பவங்கள், மதம் சாராத குற்றம் சார்ந்த அல்லது சமூக பூசல் சார்ந்தவை.

இதில், 51 வழக்குகள் அண்டை வீட்டாருடனான பூசல்கள் தொடர்பானது, 23 வழக்குகள் நிலம் தொடர்பானது, 106 வழக்குகள் திருட்டு தொடர்பானது, 26 வழக்குகள் முந்தைய தனிப்பட்ட பகை தொடர்பானது, 58 வழக்குகள் பாலியல் வன்கொடுமை தொடர்பானது, 172 அசாதாரண மரணம் தொடர்பானது. இந்தச் சம்பவங்களில் 498 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரச்சினைகள் இருப்பதை நாங்கள் மறுக்கவில்லை. அதேநேரத்தில், சிறுபான்மைச் சமூகங்களைப் பாதிக்கும் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் உண்மையை தெரிவிப்பதே இதன் நோக்கம். சிறுபான்மையினரை பாதிக்கும் பெரும்பாலான சம்பவங்கள் மத வேறுபாடுகளைக் கடந்து அனைத்து குடிமக்களையும் பாதிக்கும் சமூக காரணிகளால் தூண்டப்பட்டவை என்பதை தரவுகள் நிரூபிக்கின்றன’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022-ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, வங்கதேசத்தில் 1.31 கோடி இந்துக்கள் வசிக்கின்றனர். இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 7.95%. பவுத்தர்கள் 10 லட்சம் பேரும், கிறிஸ்தவர்கள் 5 லட்சம் பேரும், கீக்கியர்கள் 2 லட்சம் பேரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT