வங்கதேச அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர்
டாக்கா: வங்கதேச நாட்டின் 23-வது அதிபராக மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிபர் தேர்தலில் 255 வாக்குகளை அவர் பெற்றார்.
கடந்த 2024-ல் வங்கதேசத்தில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
அப்போதைய அரசியல் மாற்றங்களுக்குப் பிறகும், ஹசீனா ஆதரவாளரும் 1971 விடுதலைப் போராட்ட வீரருமான முகமது ஷஹாபுதீன் மட்டுமே அரசியல் சாசனப் பதவியான அதிபர் பொறுப்பில் நீடித்து வந்தார்.
இதன் பின்னர் பிரதமர் தாரிக் ரஹ்மான் தலைமையிலான தற்போதைய புதிய அரசுடன் ஏற்பட்ட இணக்கமற்ற அரசியல் சூழல் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக முகமது ஷஹாபுதீன் தனது பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். இதையடுத்து அதிபர் தேர்தலை அறிவித்தது அந்நாட்டுத் தேர்தல் ஆணையம்.
அதன்படி இன்று (ஆக.20) அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 343 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் தங்களது வாக்குகளை செலுத்தினர். பிற்பகல் 2 முதல் 5 மணி வரை இந்த தேர்தல் நடைபெற்றது.
இதில் ஆளும் தரப்பில் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் மற்றும் 11 எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக அகமது போட்டியிட்டனர். இதில் ஆலம்கீர் 255 வாக்குகளை பெற்று அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார்.
கடந்த 35 ஆண்டுகளில் அந்நாட்டு தேர்தலில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர் அதிபர் தேர்தலில் போட்டியிட்டது இதுவே முதல் முறை என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.
யார் இந்த ஆலம்கீர்?
அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஆலம்கீர், வங்கதேச தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளராக செயல்பட்டவர். கடந்த 2016 முதல் அதிபர் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்படும் வரையில் இந்தப் பதவியை அவர் கவனித்தார். தற்போது இந்த கட்சி தான் அந்நாட்டில் ஆட்சியில் உள்ளது.
கடந்த 1990 முதல் வங்கதேச தேசிய கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். பொருளியல் பட்டம் பெற்றவர். ஆசிரியராக பணியாற்றி உள்ளார். கட்சி மற்றும் ஆட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். 78 வயதான அவர், நாளை (வெள்ளிக்கிழமை) வங்கதேச அதிபராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.