கோப்புப் படம்
டாக்கா: மாணவர் போராட்டத்தின்போது வன்முறையை தூண்டிய குற்றச்சாட்டில் ஹேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த 7 தலைவர்களுக்கு வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
வங்கதேச தலைநகர் டாக்காவில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி டாக்காவில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அதுமுதல் அவர் தொடர்ந்து இந்தியாவில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த 7 மூத்த தலைவர்களுக்கு வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் - 2 இன்று (செவ்வாய்கிழமை) மரண தண்டனை விதித்துள்ளது. நீதிபதி முகமது நஸ்ருல் இஸ்லாம் சவுத்ரி தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ஏழு பேருக்குமான தீர்ப்பை வழங்கியது.
அவாமி லீக் பொதுச் செயலாளரும் முன்னாள் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சருமான ஒபைதுல் குவாடர், இணைப் பொதுச் செயலாளர் ஏ.எப்.எம். பஹாவுதீன் நசிம், முன்னாள் தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் முகமது அலி அரபாத் ஆகியோர் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் அடங்குவர்.
ஜூபோ லீக் தலைவர் ஷேக் பஸ்லே ஷம்ஸ் பராஷ், அதன் பொதுச் செயலாளர் மைனுல் ஹொசைன் கான் நிகில், வங்கதேச சத்ரா லீக் தலைவர் சத்தாம் ஹுசைன், அதன் பொதுச் செயலாளர் ஷேக் வாலி ஆசிஃப் எனன் ஆகியோருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் யாரும் விசாரணைக்கு நேரில் ஆஜராகாத நிலையில் இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2024ம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தின் போது வன்முறையை தூண்டியது; வழிநடத்தியது; துணை புரிந்தது, போராட்டங்களை ஒடுக்க முயன்றது போன்ற குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
முன்னதாக, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதற்கான தீர்ப்பு அளிக்கப்பட்டு 10 மாதங்கள் கடந்த நிலையில், இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.