இறுதிச் சடங்கு பிரார்த்தனையில் தாரிக் ரஹ்மான்
டாக்கா: வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரான மறைந்த கலிதா ஜியாவின் உடல், அவரது கணவர் ஜியாவுர் ரஹ்மானின் கல்லறைக்கு அருகில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் திராளான மக்கள் கலந்து கொண்டனர்.
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசிய கட்சியின் தலைவருமான கலிதா ஜியா நேற்று காலை 6 மணி அளவில் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கு, தலைநகர் டாக்காவின் சவுத் பிளாசாவில் இன்று பிற்பகல் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக டாக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மைமன்சிங், நாராயண்கஞ்ச், முன்ஷிகன்ஞ், பிரமன்பாரியா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளான மக்கள் வந்திருந்தனர்.
கலிதா ஜியாவின் உடல் அவரது மகன் தாரிக் ரஹ்மானின் குல்ஷன் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு உறவினர்களும், பல்வேறு பிரமுகர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர். தனது தாயின் சவப்பெட்டிக்கு அருகில் அமர்ந்து தாரிக் ரஹ்மான் குரான் வசனங்களை ஓதினார். அவருடன் சேர்ந்து மற்ற குடும்ப உறுப்பினர்களும் குரான் ஒதி பிரார்த்தனை செய்தனர். இதையடுத்து, காலை 11 மணிக்கு வீட்டில் இருந்து அவரது உடல் வாகனம் மூலம் தொழுகை அஞ்சலிக்காக டாக்காவில் உள்ள ஜாதியா சன்சத் பவன் வளாகத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
அங்கு நடைபெற்ற இறுதி தொழுகையில் வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, ஷெர்-இ-பங்களா நகரில் உள்ள ஜியாவுர் ரஹ்மானின் கல்லறைக்கு அருகில் கலிதா ஜியாவின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, உடல் அங்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
கலிதா ஜியாவின் இறுதிச் சடங்கில், பாகிஸ்தான் தேசிய அவையின் சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக், நேபாளத்தின் வெளியுறவு அமைச்சர் பால நந்தா ஷர்மா, பூட்டான் அமைச்சர் பியோன்போ துன்க்யெல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்திய அரசு சார்பில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் டாக்கா சென்று தாரிக் ரஹ்மானைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், பிரதமர் மோடியின் தனிப்பட்ட கடிதத்தையும் வழங்கினார்.