BackPg

காதலிக்கு ரூ.900 கோடி வழங்கிய இத்தாலி முன்னாள் பிரதமர்

செய்திப்பிரிவு

ரோம்: இத்தாலி நாட்டின் பிரதமராக 4 முறை சில்வியோ பெர்லுஸ்கோனி பதவி வகித்தார். அவருக்கு 2 மனைவிகள். 2020-ம் ஆண்டில் மார்தா பாசினா என்ற பெண் எம்.பி.யுடன் அவருக்கு காதல் மலர்ந்தது. அப்போது அவருக்கு 83 வயது. மார்தாவுக்கு 33 வயது.

கடந்த மாதம் 12-ம் தேதி பெர்லுஸ்கோனி உயிரிழந்தார். தனது ரூ.56,000 கோடி மதிப்பிலான சொத்துகள் தொடர்பாக அவர் உயில் எழுதி வைத்துள்ளார். இதன்படி பெர்லுஸ்கோனியின் முதல் மனைவிக்கு பிறந்த மகன், மகளுக்கு பினின்வெஸ்ட் ஊடக நிறுவனத்தில் 53 சதவீத பங்குகளும் 2-வது மனைவிக்கு பிறந்த இரு மகள்கள், மகனுக்கு 47 சதவீத பங்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. பெர்லுஸ்கோனிக்கு சொந்தமான அனைத்து நிறுவனங்களையும் முதல் மனைவி, 2-வது மனைவியின் குடும்பங்கள் இணைந்து நடத்த வேண்டும் என்று உயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தவிர பெர்லுஸ்கோனியின் தம்பி பியர், நெருங்கிய நண்பர் மார்செல்லோ ஆகியோருக்கும் சொத்துகள் ஒதுக்கியுள்ளார்.

கடைசி காலத்தில் காதலித்த மார்தா பாசினாவுக்கு ரூ.900 கோடி சொத்துகளை பெர்லுஸ்கோனி வழங்கியுள்ளார். இதன்படி இத்தாலியின் ஆர்கோர் பகுதியில் பிரம்மாண்ட வீடு மார்தாவுக்கு கிடைத்துள்ளது. இந்த வீடு இத்தாலியின் ஸ்டாம்பா மன்னர் குடும்பத்துக்கு சொந்தமான 18-ம் நூற்றாண்டு அரண்மனை ஆகும். கடந்த 1974-ம் ஆண்டில் அரண்மனையை பெரும்தொகை கொடுத்து பெர்லுஸ்கோனி வாங்கியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT