உலகம்

அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் தலைவர் காமேனி உயிரிழப்பு - இடைக்கால தலைவர், புதிய ராணுவ தளபதி பொறுப்பேற்பு

செய்திப்பிரிவு

டெஹ்ரான்: அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய ராணுவத் தாக்குதலில் ஈரான் உச்சதலைவர் அயத்துல்லா அலி காமேனி (88) மற்றும் மூத்த ராணுவ தளபதிகள் உயிரிழந்தனர். காமேனி உயிரிழந்ததை ஈரான் அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஈரான் தலைநகர் டெஹ்ரானின் மத்திய பகுதியில் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனியின் அலுவலகம் செயல்பட்டது. இங்கு காமேனி தலைமையில் நேற்று முன்தினம் காலை உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஈரான் ராணுவத்தின் 40-க்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

          

இதுதொடர்பாக இஸ்ரேலின் மொசாட் உளவுப் படைக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்த நிலையில், அமெரிக்கா, இஸ்ரேலின் போர் விமானங்கள் உடனடியாக காமேனி அலுவலகத்தை குறிவைத்து 30 குண்டுகளை வீசின.

இதில் அவரது அலுவலகம் தரைமட்டமானது. உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி, அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கூட்டத்தில் பங்கேற்ற ராணுவ தளபதிகள் அனைவரும் உயிரிழந்தனர்.

காமேனி உயிரிழந்ததை ஈரான் அரசு நேற்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அவரது மறைவையொட்டி 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். 7 நாட்கள் பொது விடுமுறை விடப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இடைக்கால உச்ச தலைவர்:

காமேனி உயிரிழந்ததை தொடர்ந்து, ஈரானின் இடைக்கால உச்ச தலைவராக அயத்துல்லா அலிரேசா அரபி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதிய ராணுவ தளபதி பொறுப்பேற்பு:

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் ஈரான் ராணுவ தலைமை தளபதி அப்துல் ரஹீம் மவுசாவி உயிரிழந்தார். புதிய தலைமை தளபதியாக அகமது வாகிதி உடனடியாக பொறுப்பேற்றார்.

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் முன்னாள் அதிபர் அகமதிநிஜாத், ஈரான் பாதுகாப்பு கவுன்சில் ஆலோசகரும் காமேனியின் ஆலோசகருமான அலி ஷாம்கனி ஆகியோரும் உயிரிழந்தனர். இஸ்ரேல் ராணுவம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் ஈரானின் பல்வேறு பகுதிகளில் 1,200-க்கும் மேற்பட்ட சக்திவாய்ந்த குண்டுகள் வீசப்பட்டன’ என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவத்தின் மத்திய கிழக்கு பிராந்திய தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘ஈரான் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 5 பேர் காயமடைந்துள்ளனர்’ என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT