உலகம்

“பொது போக்குவரத்தை பயன்படுத்துங்கள்” - நாட்டு மக்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் வலியுறுத்தல்

மோகன் கணபதி

கேன்பரா (ஆஸ்திரேலியா): போரின் பொருளாதார அதிர்வுகள் மாதக்கணக்கில் நீடிக்கும் என தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ், தற்போதைய சூழலில் நம்பிக்கையுடன் இருப்பது கடினம் என்று கூறியுள்ளார். மேலும், எரிபொருளம் மீதான அழுத்தத்தைக் குறைக்க பொதுமக்கள் பொது போக்குவரத்தை அதிக அளவில் பயன்படுத்த முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேற்காசிய போரால் முன்னெப்போதும் இல்லாத எரிபொருள் தட்டுப்பாட்டை பல்வேறு நாடுகள் சந்தித்து வருகின்றன. வரும் காலங்களில் இது மேலும் விரிவடையும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், கரோனா காலத்தில் முந்தைய பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையைப் போல, தற்போதும் ஆஸ்திரேலிய பிரதமர் உரை நிகழ்த்தினார். அவரது உரை, முக்கிய தொலைக்காட்சிகள், வானொலிகள் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பப்பட்டன.

          

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தனது உரையில், ‘‘தற்போதைய சூழலில் நம்பிக்கையுடன் இருப்பது கடினம் என்பதை நான் நன்கு உணர்கிறேன். மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் இந்த போர், பெட்ரோல், டீசல் விலைகளில் வரலாற்றில் இல்லாத அளவில் மிகப் பெரிய உயர்வை ஏற்படுத்தி உள்ளது.

இந்த போரில் ஆஸ்திரேலியா நேரடியாக பங்கேற்கவில்லை என்றாலும், அதன் தாக்கத்தால் ஆஸ்திரேலிய மக்கள் அதிக விலையைச் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த போரினால் ஏற்பட்டுள்ள பொருளாதார அதிர்வுகள் இன்னும் பல மாதங்களுக்கு நம்மை விட்டு நீங்காமல் இருக்கும்.

இந்த வாரத்தில் தொடங்கவுள்ள ஈஸ்டர் விடுமுறைக் காலத்தை முன்னிட்டு எரிபொருளை அதிக அளவில் வாங்கி வைப்பதைத் தவிர்க்க வேண்டும். எரிபொருள் விநியோகத்தின் மீதான அழுத்தத்தைக் குறைக்க பொதுமக்கள் தங்களால் இயன்ற பங்கைச் செலுத்த வேண்டும்.

நீங்கள் சாலையில் பயணம் மேற்கொள்ளவிருந்தால், உங்களுக்கு தேவைக்கு அதிகமான எரிபொருளை நிரப்ப வேண்டாம். வழக்கமாக நீங்கள் நிரப்புவது போலவே நிரப்பிக்கொள்ளுங்கள். உங்களை சுற்றியுள்ளவர்களையும் கிராமப்புறங்களில் உள்ளவர்களையும் அத்தியாவசியத் துறைகளில் பணியாற்றுபவர்களையும் கருத்தில் கொள்ளுங்கள்.

வரும் வாரங்களில் நீங்கள் பணிக்குச் செல்லும்போது ரயில், பேருந்து அல்லது டிராம் போன்ற பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்த உங்களால் இயலுமென்றால் தயவுசெய்து அவ்வாறே செய்யுங்கள். ஒரு மாத காலமாக நீடித்து வரும் இந்த மோதல், மேற்கு ஆசியா முழுவதும் பரவி ஆயிரக்கணக்கானோரை கொன்றுள்ளது.

எரிசக்தி விநியோகத்தை தடை செய்துள்ளது. உலகப் பொருளாதாரத்தை அதலபாதாளத்தில் தள்ளும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. வரும் மாதங்கள் எளிதாக இருக்காது. எனினும், அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும்’’ என்று தெரிவித்துள்ளார்.

தனக்கு தேவையான எரிபொருளில் 90 சதவீதத்தை இறக்குமதி செய்யும் நாடு ஆஸ்திரேலியா என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT