உலகம்

“அமெரிக்காவில் இந்து கோயில்கள் குறிவைக்கப்படுகின்றன...” - நியூயார்க் மேயர் மம்தானி பேச்சு

மோகன் கணபதி

நியூயார்க்: கடந்த ஓராண்டாக அமெரிக்காவில் இந்து கோயில்கள் குறிவைக்கப்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள நியூயார்க் மேயர் ஜோஹ்ரன் மம்தானி, முன்பு சமூகத்தின் ஓரங்களில் இருந்த வெறுப்புணர்ச்சி தற்போது அரசியல் பிரச்சாரங்களின் மைய இடத்தைப் பிடித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பஞ்சாபைச் சேர்ந்த இந்து தாய்க்கும், குஜராத்தி உகாண்டன் முஸ்லிம் தந்தைக்கும் பிறந்தவரான ஜோஹ்ரன் மம்தானி, நியூயார்க் நகர வரலாற்றிலேயே முதல் இந்திய - அமெரிக்க மேயராக பதவி வகித்து வருகிறார்.

நியூயார்க் நகரில் நேற்று நடைபெற்ற (நவ.17) தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய மம்தானி, “நமது பொதுவான பாரம்பரியம் என்பது ஒரே மொழி, ஒரே மதம் அல்லது ஒரே அடையாளத்துக்குள் அடங்கியது அல்ல.

சிறு வயதில் இருந்தே இந்து மதத்தில் எவ்வளவு அழகும் ஞானமும் பொதிந்துள்ளன என்பதை எனது தாயின் குடும்பத்தினர் எனக்கு கற்றுக்கொடுத்தனர். பல தெய்வங்களையும் பல்வேறு கதைகளையும் கொண்ட ஒரு மதமாக இந்து மதம் இருக்கிறது.

இது பல தெய்வங்களை வணங்கும் ஒரு நம்பிக்கை முறை. இதன் மிகத் தொன்மையான புனித நூல், சத்தியத்தை அடைவதற்கு பல வழிகள் உள்ளன என்றும், நாம் கோயிலிலோ, மசூதியிலோ அல்லது குருத்வாராவிலோ வழிபாடு செய்தாலும் அல்லது எந்த மதத்தையும் பின்பற்றாதவராக இருந்தாலும் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரே ஒளிதான் குடிகொண்டிருக்கிறது என்பதை போதிக்கிறது.

நாம் எப்படிப்பட்ட சகோதரனாக, மனைவியாக, கணவனாக அல்லது நண்பனாக இருக்க விரும்புகிறோமோ அத்தகைய முன்மாதிரிகளை ராமாயணம் காட்டுகிறது. குடும்பங்கள் உண்மையில் எப்படிப்பட்டவை என்பதை மகாபாரதம் நமக்கு உணர்த்துகிறது. அங்கு மிகச் சிறந்த வீரர்களும், ஞானம் மிக்க தெய்வங்களும் கூடத் தடுமாறக் கூடும். அங்கு ஒருவரின் தனிப்பட்ட விசுவாசத்தைவிட தர்மமே முதன்மையானதாக இருக்க வேண்டும் என்பதையே அது காட்டுகிறது.

இந்த மரபுகளின் ஞானம், வெறும் மதச் சடங்குகளைத் தாண்டி, உலகம் முழுவதும் நீதிக்கான போராட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரை மற்றம் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் வாஷிங்டன் நோக்கிய பேரணி ஆகியவை இதற்கு உதாரணங்கள்.

கடந்த ஓராண்டாக அமெரிக்காவில் இந்து கோயில்கள் குறிவைக்கப்படுகின்றன. அமெரிக்க மத்திய அரசின் உயர்மட்டத் தலைவர்கள் சீக்கியர்களைக் குறிவைத்துள்ளனர். சமூகத்தின் ஓரங்களில் மட்டுமே இருந்த வெறுப்புணர்ச்சி, தற்போது அரசியல் பிரச்சாரங்களின் மைய இடத்தைப் பிடித்துள்ளது.

வாஷிங்டனாக இருந்தாலும் சரி, டெல்லியாக இருந்தாலும் சரி, எங்கு அச்சத்தை விதைக்கும் அரசியல் நடந்தாலும், அத்தகைய அரசியலை நிராகரிக்க வேண்டிய கூட்டுப் பொறுப்பு நமக்கு உண்டு. பிளவுபடுத்தும் அரசியலை நிராகரிப்போம்; பாகுபாட்டுக்கு எதிராக ஒன்றிணைவோம்.

சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்லுங்கள் என்றும், இந்த மண்ணில் உங்களுக்கு இடம் இல்லை என்றும் உங்களிடம் யாரேனும் கூறி இருந்தால், நான் உறுதியாகச் சொல்கிறேன், இதுதான் உங்கள் இல்லம்” என தெரிவித்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT