உலகம்

ஈரானில் 533 அணைகளுக்கு கீழ் ஏவுகணைத் தளங்களா? - பரபரப்பு கட்டுரையும் பின்னணியும்

‘தி நியூயார்க் டைம்ஸ்’ சொல்வது என்ன?

போத்தி ராஜ்.க

வாள் முனையை விட பேனா முனை வலிமையானது என்பர்.  போர்ச் சூழல்களில் பேனாக்களில் இருந்து கசியும் மை களத்தில் உண்டாக்கும் பாதிப்பு மிகவும் ஆபத்தானது. அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையிலான யுத்தம் நீடிக்கும் வேளையில், 'தி நியூயார்க் டைம்ஸ்' நாளேட்டின் புலனாய்வுக் கட்டுரை ஒன்று ஒட்டுமொத்த உலகையும் அதிர வைத்துள்ளது.

மத்திய கிழக்கில் வெடித்துள்ள அமெரிக்கா - ஈரான் போர், இப்போது  அதன்கொடூர விளிம்பில் நிற்கிறது. ஒரு சொட்டு நீருக்காக வீதிகளில் இறங்கிப் போராடும் 2.8 கோடி மக்களின் தாகம் ஒருபுறம்; ஆறுகள் வறண்டு உப்புப் பாலைவனங்களாக மாறிய நிலத்தின் ஓலம் மறுபுறம். ‘நீர் திவால்நிலை’யில் (Water Bankruptcy) மூச்சுத் திணறுகிறது ஈரான். இத்தகைய சூழலில், மக்கள் உயிர்வாழக் கட்டப்பட்ட 533 அணைகளையும் 'ரகசிய ஏவுகணைத் தளங்கள்' என நியூயார்க் டைம்ஸ் முத்திரை குத்தியுள்ளது.

ஒரு சொட்டு நீருக்காக மக்கள் தவிக்கும் தேசத்தில், எதற்காக 533 பிரம்மாண்ட அணைகள்? குடிநீருக்காகவா, இல்லை மலைகளுக்கு அடியில் ஒளிந்திருக்கும் ரகசிய ஏவுகணை நகரங்களுக்காகவா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

ஈரானின் நிலத்தடி ஏவுகணைத் தளங்களுக்கு அணைகளிலிருந்து தான் மின்சாரமும் நீரும் செல்கின்றன என்ற செய்தி தற்செயலானதா அல்லது வெள்ளை மாளிகையின் சதியா, 533 அணைகளில் 50-இல் கூட மின்சாரம் தயாரிக்கப்படுவதில்லை என்ற அறிவியல் உண்மை ஏன் மறைக்கப்பட்டது என ஈரான் எதிர் கேள்வி எழுப்புகிறது.

மறுபுறம், கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்ட விஞ்ஞானிகளே நியூயார்க் டைம்ஸ் செய்தியை மறுப்பது ஏன்? தகவல் போருக்கும், கள யதார்த்தத்திற்கும் இடையிலான மெல்லிய கோட்டை தெரிந்துகொள்வோம்.

தி நியூயார்க் டைம்ஸ் நாளேட்டின் கூற்று:

கடந்த 16-ஆம் தேதி, நியூயார்க் டைம்ஸ் நாளேட்டில் ‘War May Answer Longtime Riddle of Iranian Dams Built for No Clear Reason’ என்ற கட்டுரை வெளியானது. செய்தியாளர்கள் சனம் மஹூசி, எரிகா சாலமன் இணைந்து எழுதிய இக்கட்டுரை சர்வதேச அளவிலான அரசியல், ராணுவ விவாதங்களைத் தூண்டியுள்ளது.

‘ஈரானில் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் நிலவும் சூழலிலும், அந்நாடு தொடர்ந்து நூற்றுக்கணக்கான அணைகளையும் நீர் திட்டங்களையும் கட்டமைத்து வருகிறது. இவை மக்களின் குடிநீர் மற்றும் வேளாண்மை தேவைக்கு மட்டுமன்றி, மலைகளுக்கு அடியில் அமைந்துள்ள ரகசிய ஏவுகணைத் தளங்களுக்குத் தடையற்ற நீர், மின்சாரம் வழங்கும் நோக்கத்துடன் கட்டப்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் சந்தேகிக்கிறார்கள்’ என அக்கட்டுரை குறிப்பிட்டுள்ளது.

மேலும், யாஸ்த் மாகாண நீர் திட்டமும், தெற்கே ஹோர்மோஸ்கான் மாகாணத்தின் தாரோம் பாதுகாக்கப்பட்ட பகுதியும் அமெரிக்கத் தாக்குதல் பகுதிகளுக்கு அருகே இருப்பதாகவும், 2018-இல் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்ததற்கும் இதற்கும் தொடர்பிருக்கலாம் எனவும் அதில் ஒரு யூகம் எழுப்பப்பட்டிருந்தது.

ஈரானின் கள யதார்த்தம்:

ஈரான் அரசு மற்றும் ஹாம்பர்க் தொழில்நுட்பப் பல்கலைக்கழக நீர் பாதுகாப்பு நிபுணர் நிமா ஷோக்ரி தரவுகளின்படி, ஈரானில் குறைந்தபட்சம் 533 பெரிய அணைகள் உள்ளன. ஆனால், இவற்றில் 50-க்கும் குறைவான அணைகளில் மட்டுமே மின்சாரம் தயாரிக்கும் டர்பைன்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மறுபுறம், ஈரானின் 8.5 கோடி மக்கள் தொகையில் 2.8 கோடி மக்கள் கடுமையான தண்ணீர்ப் பஞ்சத்தில் வாழ்கின்றனர். முறையற்ற அணைக் கட்டுமானங்களால் 30 லட்சம் ஹெக்டேர் ஈரநிலங்களில் 20 லட்சம் ஹெக்டேர் (67%) அழிந்துவிட்டதாக ஈரான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு குறிப்பிடுகிறது.

கடந்த நான்கு தசாப்தங்களாகச் செயல்படுத்தப்பட்ட அறிவியலற்ற அணைக் கட்டுமானங்களே இந்த 'நீர் திவால்நிலைக்கு' காரணமாகும். பல அணைகள் ஆறுகளின் நீர்வரத்துத் திறனை விட அதிகக் கொள்ளளவு கொண்டவையாகக் கட்டப்பட்டதால், கீழ்ப்பகுதி ஆறுகள் மற்றும் நிலத்தடி நீர் ஊற்றுகளின் இயற்கையான ஓட்டம் துண்டிக்கப்பட்டது.

நீர் இடமாற்றத் திட்டங்களால் நீர் வழங்கிய பகுதிகளும் வறண்டு, அதனைப் பெற்ற பகுதிகளும் வீணாகின. புகழ்பெற்ற உர்மியா உப்பு ஏரிக்கு நீர் வரும் ஆறுகளின் குறுக்கே 50-க்கும் மேற்பட்ட அணைகளைக் கட்டியதால், நீர் வரத்து 90 சதவீதம் குறைந்து அது உப்பு பாலைவனமாக மாறியது. அங்கிருந்து வீசும் உப்புப் புழுதிக் காற்று விவசாய நிலங்களை தகுதி அற்றவைகளாக மாறி, மக்களுக்கு சுவாச நோய்களையும் ஏற்படுத்தியது.

நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்குச் சென்றதால், தெஹ்ரான் மற்றும் இஸ்ஃபஹான் நகரங்களில் ஆண்டுக்கு 15 முதல் 30 சென்டிமீட்டர் வரை நிலம் உள்வாங்கி வருகிறது.

ஈரானின் பதிலடியும் விஞ்ஞானிகள் எதிர்ப்பும்:

நியூயார்க் டைம்ஸ் கட்டுரைக்கு ஈரான் கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, “நியூயார்க் டைம்ஸ் கட்டுரை ஒரு குப்பை. 2003-ல் ஈராக் போரின்போது கொண்டு வந்த பொய்ப் பிரச்சாரத்தை, இஸ்ரேல் ஆதரவு ஊடகம் மீண்டும் கையிலெடுத்துள்ளது. இதை யாரும் நம்பப் போவதில்லை” என்றார்.

நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், “அமெரிக்கா அல்லது இஸ்ரேலிய ராணுவத் தளங்களுக்கு அருகில் இருக்கும் எந்தவொரு அணையும், துறைமுகமும், மின்நிலையமும் இனி இரட்டைப் பயன்பாடு கொண்டவைதான். உங்கள் தர்க்கத்தையே நாங்களும் பயன்படுத்துவோம்” என எச்சரித்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்ட ஐ.நா பல்கலைக்கழக நீர் நிறுவன இயக்குநர் கவே மதானி, “ஊகம் சான்று ஆகாது. ஈரானைத் தாக்கியவர்கள் கூட அணைகளை ஏவுகணைகளுடன் தொடர்புபடுத்தவில்லை. எனது கருத்துகளுக்கும் ஏவுகணைகளுக்கும் தொடர்பில்லை. இது பொறுப்பற்ற பத்திரிகைப் பணி” எனக் கண்டித்துள்ளார்.

மற்றொரு நிபுணர் நிமா ஷோக்ரி, “அணைகள் ராணுவ இலக்குகளுக்கு அருகில் அமைந்திருப்பது, அவற்றின் மீது தாக்குதல் நடத்துவதை நியாயப்படுத்தாது” என 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.

2003-இல் சதாம் உசேனிடம் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகச் செய்தி வெளியிட்டுவிட்டு, 2004-இல் மன்னிப்பு கோரியது நியூயார்க் டைம்ஸ். அதே பாணியில், இப்போது ஈரானின் சிவிலியன் அணைகளை அழிப்பதற்கான நியாயத்தை உருவாக்கவே இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக விமர்சகர்கள் சாடுகின்றனர்.

அமெரிக்க அரசுக்குத் தொடர்பா?

இக்கட்டுரை வெளியான நேரமும், அதையொட்டி அதிபர் ட்ரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்ததும் திட்டமிட்டதாக இருக்கலாம் எனச் சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால், இதை நியூயார்க் டைம்ஸ் நாளேடு மறுக்கிறது. அதன் செய்தித் தொடர்பாளர் நிக்கோல் டெய்லர், “தாங்கள் எவ்வித வன்முறையையோ, அணைகள் மீதான தாக்குதலையோ ஆதரிக்கவில்லை. ஏழு சர்வதேச நிபுணர்களின் ஆய்வுகளின் அடிப்படையிலேயே சுதந்திரமான புலனாய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டது” என விளக்கமளித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT