ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான்
தெஹ்ரான்: மேற்கு ஆசியாவில் பதற்றம் நீடிக்கும் நிலையில், ஈரான் அரசு மீது பலத்தைப் பிரயோகிக்கும் எந்தவொரு முயற்சியும் இறுதியில் தோல்வியடையும் என்று அந்நாட்டின் அதிபர் மசூத் பெசஷ்கியான் திட்டவட்டமாகக் கூறினார்.
இஸ்லாமாபாத்தில் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை முட்டுக்கட்டையில் முடிந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே நேரத்தில், கடந்த இரு நாட்களாக ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கப் படைகள் முற்றுகையிட்டு வருகின்றன.
இந்தச் சூழலில் ஈரான் அரசு ஊடகமான ஐஎஸ்என்ஏ-வில் ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் வெளியிட்ட அறிக்கையில், "நாங்கள் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையை வலியுறுத்துகிறோம். ஆனால் சரணடைய நிர்பந்திப்பதை ஏற்க மாட்டோம். ஈரானை சரணடைய வைக்கவோ அல்லது ஈரான் மீது பலத்தை திணிக்கும் எந்தவொரு முயற்சியும் தோல்வியடையும். மக்களும் அத்தகைய அணுகுமுறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஈரான் ஒருபோதும் போரை நாடவில்லை
எங்கள் நாட்டின் மீதான தாக்குதல் எந்த அதிகாரத்தின் பேரில், எந்தக் காரணத்துக்காக நடத்தப்பட்டது? சர்வதேச சட்டம் மற்றும் மனிதாபிமானக் கொள்கைகளின் அடிப்படையில் பொதுமக்கள், குழந்தைகள் ஆகியோரைக் குறிவைத்து தாக்கவும், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளிட்ட முக்கிய மையங்களை அழிப்பதற்கும் என்ன நியாயம் இருக்கிறது?” என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடி தரும் வகையில் வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்தம் செய்ய பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்தது. இதனால் 2 வார காலம் இடைக்கால போர் நிறுத்தம் அமலானது.
இந்த போர் நிறுத்தம் 21-ம் தேதியுடன் முடிகிறது. அதற்குள் நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட பல்வேறு தரப்பினர் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, கடந்த சனிக்கிழமை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா, ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இது தோல்வியடைந்தது. இதையடுத்து ஹார்முஸ் ஜலசந்தியை முடக்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். இதனால் மேற்காசியாவில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.