டெஹ்ரான்: ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. அந்த நாட்டில் இதுவரை 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமேனிக்கு எதிராக கடந்த டிசம்பர் 28-ம் தேதி தலைநகர் டெஹ்ரானில் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. அப்போது டெஹ்ரானின் முக்கிய வணிக சந்தையான கிரான்ட் பஜாரில் கடைகள் அடைக்கப்பட்டன. ஜென் இசட் இளைஞர்கள் (1997 முதல் 2012-க்குள் பிறந்தவர்கள்) தலைநகரில் திரண்டு மதத் தலைவர் காமேனி, அதிபர் மசூத் பெசேஸ்கியான் பதவி விலக வலியுறுத்தினர்.
கடந்த இரு வாரங்களில் அரசுக்கு எதிரான போராட்டம் ஈரான் முழுவதும் வியாபித்து பரவி உள்ளது. இளைஞர்கள், வணிகர்கள், ஜனநாயக ஆட்சியை விரும்பும் அமைப்புகள், குர்து, பலூச் இன மக்கள் அரசுக்கு எதிராக சாலை, தெருக்களில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் போராட்டம் வலுவடைந்து வருவதால் ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர். பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத ஈரான் மூத்த அதிகாரி ஒருவர் சர்வதேச செய்தி நிறுவனத்திடம் நேற்று கூறும்போது, “அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈரான் முழுவதும் இதுவரை 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்” என்று தெரிவித்தார்.
ஈரான் இன்டர்நேஷனல் என்ற இணைய ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘ஈரானில் கடந்த டிசம்பர் முதல் இதுவரை 12,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதை அரசு தரப்பு மறைக்கிறது. ஊடகங்கள் முடக்கப்பட்டு உள்ளன. இணைய சேவை, தகவல் தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் “ஈரானிய தேசப் பற்றாளர்களே தொடர்ந்து போராடுங்கள். அரசு கட்டமைப்புகளை கைப்பற்றுங்கள். உங்களுக்கு தேவையான உதவிகள் வந்து கொண்டிருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது திடீர் தாக்குதல் நடத்தக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.