தெஹ்ரான்: போர் வேண்டாம் என்ற செய்தியையே தேர்தல் மூலம் அமெரிக்க மக்கள் அளித்திருக்கிறார்கள் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகம்மது பாகர் கலிபா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘மனசாட்சி காரணமாகவோ அல்லது வாழ்க்கைச் செலவினங்கள் காரணமாகவோ போர் வேண்டாம் என்ற செய்தியை இந்தத் தேர்தல் மூலம் அமெரிக்க மக்கள் அளித்திருக்கிறார்கள். அவர்கள் அளித்திருக்கும் இந்தச் செய்தியை நாங்கள் ஆதரிக்கிறோம்.
சர்வதேச அளவில் பணம் கொடுப்பவர்களுக்கும், மிரட்டிப் பணம் பறிப்பவர்களுக்கும் சேவை செய்தற்காக அமெரிக்க அரசாங்கம் நாட்டு மக்களின் விருப்பத்துக்கு துரோகம் செய்யக் கூடாது. மீறினால், எங்கள் பதிலடி கடுமையானதாக இருக்கும் என்பதை அது தெரிந்து கொள்ளும்’ என தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு ஏற்பட்டுள்ள இடைக்காலத் தேர்தல் பின்னடைவை ஈரான் மக்கள் கொண்டாடி வருகின்றனர். கைகளில் தேசியக் கொடியை ஏந்தியவாறு அவர்கள் வீதிகளில் ஊர்வலமாகச் சென்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே, ஜனநாயகக் கட்சியின் வெற்றிக்குப் பிறகும் அமெரிக்க நிர்வாகம் மாறாமல் அப்படியே இருக்கும் என்று ஜெர்மனி தெரிவித்துள்ளது. பெர்னில் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய ஜெர்மனியின் பாதுகாப்புத் துறை அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ், “அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் பெற்றுள்ள வெற்றி வரலாற்றுச் சிறப்பு மிக்கது. அதற்காக அவர்களுக்கு எனது வாழ்த்துகள். அதேவேளையில், அமெரிக்க நிர்வாகத்தில் எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை. அமெரிக்க நிர்வாகத்துடன் ஜெர்மனி நம்பிக்கையுடனும் ஒத்துழைப்புடனும் செயல்படும்.
அதிபர் டொனால்டு ட்ரம்ப் எதிர்காலத்துக்காக என்ன திட்டங்களை வைத்திருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது. இருப்பினும், ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் ஆகிய இரு தரப்பினருடனும் ஜெர்மனி தொடர்பில் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.