அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கும், ஈரானுக்கும் இடையே கடந்த பிப்ரவரி 28 அன்று போர் மூண்டது. இதில், ஈரானின் உச்ச தலைவர் அயோதுல்லா அலி கமேனி உள்பட முக்கிய தலைவர்களும், ராணுவ உயர் அதிகாரிகள் பலரும் கொல்லப்பட்டனர். பதிலடியாக ஈரான், வளைகுடா நாடுகள் மற்றும் அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டது. இந்தச் சூழலில் போரை நிறுத்தக் கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
“ஈரான் போரை நிறுத்தக் கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது நாட்டுப் பற்று இல்லாத செயல்,” என்று அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் விமர்சித்திருப்பதுதான் இந்தக் கட்டுரையைப் பதிவு செய்த நேரத்தில் கிடைத்த ஈரான் போரின் அண்மையத் தகவல். இந்தப் பின்னணியில் ஈரானின் பிரமாண்ட பேனர்கள் பேசும் சர்வதேச அரசியல் பற்றி பார்ப்போம்.
போர் ரண களத்தில் அது என்ன பிரமாண்ட பேனர் என்று நீங்கள் யோசிக்கலாம். இதைப் புரிந்து ஈரானின் அரசியலை சற்று பின்னோக்கிச் சென்று பார்க்க வேண்டும். 1979-ல் ஈரானில் நடந்த இஸ்லாமிய புரட்சியின்போது பொது இடங்களில் இத்தகைய பிரமாண்ட பேனர்கள் மக்களுடனான அரசியல் தொடர்பு சாதனமாகப் பயன்படுத்தப்பட்டதாக வரலாறு சொல்கிறது. இஸ்லாமியப் புரட்சி ஏன் தேவை என்பதை நிறுவ, அது சார்ந்த கொள்கை வாசகங்களும், போர் நினைவிடக் காட்சிகளும், புரட்சிப் படைகளின் புகைப்படங்களும் அப்போது வைக்கப்பட்ட பிரமாண்ட பேனர்களில் காட்சிப்படுத்தப்பட்டன.
இப்போது, ஏஐ காலத்திலும் அதே பாணியை ஈரான் கையில் எடுத்துள்ளது. தெஹ்ரானில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பிரமாண்ட பேனர்களை ஈரான் அரசு வைத்துள்ளது. சமூக ஊடக காலத்தில் இதற்கென்ன அவசியம் என்று யோசிக்கத் தோன்றினாலும் கூட, தேசம் ஒரு மிகப் பெரிய நெருக்கடியில் இருக்கும்போது பாரம்பரிய முறையிலான மக்கள் தொடர்பும் அவசியம் என்று அந்நாடு கருதுதி இதை வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இது மக்களுடன் அரசாங்கம் உணர்வுப்பூர்வ இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள உதவும் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில், தெஹ்ரானில் வைக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட பேனர்கள் இப்போது சமூக ஊடகங்கள் வாயிலாக மெயின் ஸ்ட்ரீம் மீடியாக்களின் கவனத்தையும் அள்ளிவருகிறது.
இந்த பேனர்கள் மூலம், தேசத்தின் கூட்டு மனசாட்சியை தட்டி எழுப்பி, ஒற்றுமையை வலியுறுத்தவும், அரசின் பிரச்சாரத்தை மக்களிடம் ஆணித்தரமாகப் பதிய வைக்க முடியும் என்று அரசு நம்புகிறது. இந்தப் பார்வையோடு வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பேனர்களில் பாரசீகம், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இது நவீன காலத்திலும் மிகப் பெரிய காட்சித் தொடர்பு உத்திதான் என்று அந்நாட்டு அரசியல் ஆய்வாளர்கள் பாராட்டுகின்றனர்.
போர்க் காலத்தில் மின்சார சேவை பாதிப்பு, இணைய சேவை துண்டிப்பு எல்லாம் இயல்பு என்கிறபோது இந்த பிரமாண்ட பேனர்கள் மூலம் அரசு மக்களுடன் நெருக்கமான தொடர்பில் இருக்க முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
ஈரான் தன் மக்களோடு உணர்வுபூர்வ பிணைப்பை வலுவாக்க வைத்த பேனர்களின் சில மாதிரிகள் இதோ...
ஈரானின் வாலியஸர் சதுக்கத்தில் தி எப்ஸ்டீன் ஏவுகணை (The Epstein missile) என்ற குறிப்போடு ஒரு பிரம்மாண்ட பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஏவுகணைகள் படம் வரையப்பட்டு ‘மினாப் பள்ளித் தாக்குதலில் பெண் குழந்தைகளை நினைவுகூர்வதற்காக...’, ‘எப்ஸ்டீன் தீவுகளில் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளை நினைவுகூர்வதற்காக..’, ‘பிங்க் ஜாக்கெட் சிறுமிக்காக...’ (2024 தாக்குதலில் உயிரிழந்த ஈரானிய சிறுமி அவருடைய பிங்க் ஜாக்கெட், காதில் இருந்த இதய வடிவ காதணியால் அடையாளம் காணப்பட்டார். ஈரானில் அவர் பிங்க் ஜாக்கெட் சிறுமி என்றே இன்றளவும் நினைவுகூரப்படுகிறார்) என்றெல்லாம் எழுதப்பட்டுள்ளது.
போர், வன்முறை, பாலியல் சுரண்டல், அதிகாரத்தால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள், பெண்களை நினைவுகூர இந்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த பேனர்கள் மூலம் ஈரான் போரை நடத்தவில்லை... நடந்த, நடக்கும் அநீதிகளுக்கு பதில் அளிக்கிறது என்பதை நிறுவுவதே அரசின் நோக்கம் என்றும் கூறப்படுகிறது.
என்கலாப் சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள பேனரில், “உங்களுக்குப் போர் வேண்டுமென்றால், நாங்கள் தான் அதில் வித்தகர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கூடவே ஹீப்ரூ மொழியில், “இந்தப் பூமியில் இருந்து இஸ்ரேல் அப்புறப்படுத்தப்பட வேண்டும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரேல் வான்பரப்பில் இரவு நேரத்தில் பொழிந்த குண்டுமழை பின்னணிக் காட்சியாக உள்ளது. இது இஸ்ரேலுக்கான எச்சரிக்கைக்காக வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேபோல் வாலியஸர் சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் வாய் துணியால் மூடப்பட்ட பிரம்மாண்ட பேனரும் கவனம் பெற்றுள்ளது. அதில் ட்ரம்ப்பின் முகம் முழுவதுமாக இல்லை. ஆனால், பார்த்தவுடன் அது ட்ரம்ப் என்று புரிந்துகொள்ளும் வகையிலேயே உள்ளது. ட்ரம்ப் வாயின் மீதான துணி, ஹார்மூஸ் நீரிணையைப் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. கூடவே “The Breaking Point” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. கீழே பாரசீக மொழியில், “பொறுமை காத்த காலம் முடிந்தது” என்று குறிப்பிடப்படுள்ளது. இது ஹார்மூஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி கொடுப்பதை பறைசாற்றும் வகையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தெஹ்ரானின் வானாக் சதுக்கத்தில் பாரசீக பிரபல புராணக் கதையின் வில்வித்தை வீரரான அராஷின் ஓவியம் கொண்டு பேனர் வைக்கப்பட்டுள்ளது. புராணக் கதைப்படி அராஷ் என்ற வில்வித்தை வீரன் ஈரானுக்கும் அண்டைய பிராந்தியமான துரானுக்கும் இடையேயான போரின்போது இன்னுயிர் ஈர்த்தவர். அவரைப் போலவே ஈரானிய வீரர்கள், இளைஞர்கள் தாய்நாட்டைப் பாதுகாக்கத் தயாராக இருக்கிறார்கள் அல்லது இருக்கவேண்டும் என்பதை பறைசாற்றும் வகையில் அந்த பேனர் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தெஹ்ரானின் என்கலாப் சதுக்கத்தில் ஒரு மீனவர் வலையுடன் இருக்கும் புகைப்படத்துடன் கூடிய பேனர் உள்ளது. அந்த மீனவரின் வலை பாரசீக வளைகுடாவில் விரிக்கப்பட்டது போலவும், அதனுள் போரில் வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானங்கள், ட்ரோன்கள், கடற்படை கப்பல்கள் இருப்பதுபோலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த பாரசீக வளைகுடாவும் எங்களது மீன்பிடி பகுதி என்று பாரசீக மொழியில் வாசகமும் இடம்பெற்றுள்ளது. இது ஹார்மூஸ் நீரிணையின் மீது ஈரான் கொண்டுள்ள ஆதிக்கத்தை வலியுறுத்துவதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படியாக ஈரான் பிரமாண்ட பேனர்களை முக்கிய இடங்களில் வைத்து ஊடகக் கவனம் பெற்றுள்ளது.
போரும் தற்கொலையும்...
தற்கொலை எந்தப் பிரச்சினைக்கும் தீர்வல்ல என்பது போலத்தான் போரும். இதுவரை ஒரு போரினால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டது என்று வரலாற்றில் எந்தக் குறிப்பும் இல்லை.
தனிமனிதர்கள் தேசபக்தி என்ற போர்வையில் தங்கள் அதிகாரத்தை நீரூபிக்க மோதிக் கொள்வதே போர். இதில் பாதிக்கப்படுவது என்னவோ சாமானியர்கள் தான். அதுவும் உலகமயமாக்குதலுக்குப் பின்னர் ஒரு நாட்டின் போர் உலகம் முழுவதும் அதிர்வலைகளைக் கடத்துவதாக உள்ளது. இருந்தாலும் போர்கள் மலிந்துதான் வருகின்றன.
இந்த ஆண்டின் புதுவரவான ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் போர், எண்ணெய், எரிசக்தி பற்றாக்குறையை உலகம் முழுவதும் கடத்தி வருகிறது. உலகப் பொருளாதாரமே ஊசலாட்டம் கண்டு வருகிறது.
இந்தச் சூழலில் போரை விதந்தோதி, தேசப் பற்றை ஊக்குவித்து, தங்கள் பலத்தை விவரித்து, அப்பாவிகள் பலியானதற்கு அனுதாபத்தைப் பதிவு செய்து என்று விதவிதமாக ஈரான் வைத்துள்ள பேனர்களை இப்படி செய்திக் கட்டுரையாக்கலாமே தவிர அது நியாயம் என்றோ, தேவையற்றது என்றோ முடிவுரை எழுத இயலாது. ஏனெனில் காதலிலும், போரிலும் எதுவுமே தவறு இல்லை என்ற தோதான வாசகங்களோடு யாரேனும் வரக்கூடும். நாம் சொல்ல விழைவது எல்லாம் போரும் தற்கொலையும் ஒன்று என்பது மட்டுமே!