தெஹ்ரான்: அமைதிக்கான அமெரிக்காவின் 15 அம்ச திட்டம் என்பது அளவுக்கு மீறிய விருப்பத்தைக் கொண்டதும், தர்க்கமற்றதுமாகும் என கூறி அதனை ஈரான் நிராகரித்துள்ளது.
ஈரானுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 15 அம்ச அமைதி திட்டம் ஒன்றை கடந்த மார்ச் 26-ம் தேதி வெளியிட்டார்.
ஈரான் அணு ஆயுதத்துக்கு முடிவு கட்ட வேண்டும், யுரேனியம் செறிவூட்டுவதை நிறுத்த வேண்டும், ஹார்முஸ் ஜலசந்தி திறந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும், இருப்பில் உள்ள யுரேனியத்தை சர்வதேச அணுசக்தி முகமையிடம் (ஐஏஇஏ) ஒப்படைக்க வேண்டும், ஈரானின் நடான்ஸ், இஸ்ஃபஹன் மற்றும் ஃபோர்டோ ஆகிய பகுதிகளில் உள்ள அணு ஆயுத உற்பத்தி மையங்களை மூடி, ஐஏஇஏ ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும், அண்டை நாடுகளில் உள்ள தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவளிப்பதை நிறுத்த வேண்டும், ஏவுகணைகளின் எண்ணிக்கை மற்றும் இலக்கு தூரங்களுக்கு வரம்பு நிர்ணயிக்க வேண்டும், எதிர்காலத்தில் தற்காப்புக்கு மட்டுமே ஏவுகணைகளைப் பயன்படுத்த வேண்டும், ஒப்பந்தம் பற்றி பேச ஒரு மாத காலத்துக்கு போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என்பது உள்பட 15 நிபந்தனைகளை ட்ரம்ப் விதித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது தொடர்பாக 48 மணி நேரத்துக்குள் ஈரான், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால், ஈரான் நரகமாக மாறும் என்றும் எச்சரித்திருந்தார்.
எனினும், ட்ரம்ப்பின் இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், மேற்கு ஆசியாவில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்ரேல், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மீது இன்று (ஏப்ரல் 6) அதிகாலையில் இருந்தே தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை ஈரான் நடத்தியது.
இந்நிலையில், அமெரிக்காவின் 15 அம்ச திட்டம் குறித்து ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, ‘‘அமெரிக்காவின் சமாதானப் பேச்சுவார்த்தை திட்டம் அளவுக்கு மீறிய விருப்பத்தைக் கொண்டுள்ளது; தர்க்கமற்றதாக உள்ளது. அச்சுறுத்தல்களின் கீழ் பேச்சுவார்த்தைகள் நடைபெற முடியாது.
ஈரான் உள்கட்டமைப்புகளைத் தாக்குவோம் எனும் அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் போர்க்குற்றங்களுக்கு ஒப்பானவை. நாட்டை காப்பதில் ஈரான் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. அதற்கான ராணுவ முயற்சிகளோடு ராஜதந்திரமும் தொடர்கிறது’’ என தெரிவித்துள்ளதாக ஈரான் இன்டர்நேஷ்னல் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இரு தரப்புக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான், இது தொடர்பான ஒரு திட்டத்தை இரு தரப்புக்கும் அளித்துள்ளது. இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘இந்த திட்டத்தின்படி, போர் நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வரும். ஹார்முஸ் ஜலசந்தி உடனடியாக திறக்கப்படும். பரந்த ஒரு தீர்வை இறுதி செய்ய 15-20 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த திட்டம் குறித்து அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்பில் இருந்து உடனடியாக எந்த பதிலும் வரவில்லை’ என கூறப்படுகிறது.