பெய்ஜிங்: திபெத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா மிக பிரமாண்டமாக கட்டி வரும் மெடோக் நீர்மின் திட்டம் (Medog Hydropower Project) ஒரு ஆபத்தான நில அதிர்வுப் பகுதியில் அமைந்திருப்பதாக சீன அரசு புவியியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவின் அருணாச்சல பிரதேச எல்லையிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அமையவுள்ள இந்த அணை, உலகின் மிகப்பெரிய நீர்மின் திட்டமாகத் திட்டமிடப்பட்டுள்ளது. சவுத் சீனா மார்னிங் போஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சீன புவியியல் ஆய்வு அமைப்பின் மேற்பார்வையில் வெளியான ஆய்வறிக்கை ஒன்றில், இந்த அணை அமையவிருக்கும் பகுதிக்கு நேரடியாக பைஸென் ஃபால்ட் (Paizhen Fault) என்ற ஆபத்தான நிலப்பரப்புப் பிளவு கோடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
செங்டு தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மற்றும் ராணுவ-சிவில் ஒருங்கிணைப்பு மைய புவியியலாளர்கள் இணைந்து நடத்திய இந்த ஆய்வில், பனி யுகம் முதற்கொண்டே இந்த பிளவுக் கோடு தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும், இதனால் இப்பகுதியில் உள்ள பாறைகள் பலவீனமடைந்து அணை மற்றும் சுரங்கங்களின் நிலைத்தன்மையை பெருமளவில் பாதிக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.
இமயமலை நில அதிர்வு வளையத்தில் அமைந்துள்ள இப்பகுதியில் கடந்த 2017-ஆம் ஆண்டில் கூட 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், அணைக்கான நீர் தேக்கப்படும்போது சுற்றியுள்ள தளர்வான நிலப்பரப்பு மற்றும் பாறைகள் நீரை உறிஞ்சி, நிலநடுக்கக் காலங்களில் மிக எளிதாக மிகப்பெரிய நிலச்சரிவுகளை ஏற்படுத்தும் என்றும், இது ஒட்டுமொத்த கட்டுமானத்துக்கும் அங்குள்ள பணியாளர்களுக்கும் பெரும் ஆபத்தை உண்டாக்கக்கூடும் என்றும் புவியியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
சுமார் 1 லட்சம் கோடி யுவான் (137 பில்லியன் டாலர்) மதிப்பீட்டில், 60,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறனுடன் கட்டப்படும் இந்த மெடோக் அணை, சீனாவின் புகழ்பெற்ற த்ரீ கோர்ஜஸ் (Three Gorges) அணையை விட மூன்று மடங்கு பெரியதாகும். 2024 டிசம்பரில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, 2025 ஜூலையில் இதன் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. இது 2033-க்குள் வணிக ரீதியான செயல்பாட்டிற்கு வரும் என சீனா இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த அணை மூலம் கீழ்நோக்கிப் பாயும் பிரம்மபுத்திரா நதியின் நீரோட்டத்தை சீனா முழுமையாகக் கட்டுப்படுத்தக்கூடும் என்று இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் நீண்ட நாட்களாக கவலை தெரிவித்து வருகின்றன.
இருப்பினும், நீரியல் வல்லுநர்கள் கூற்றுப்படி, பிரம்மபுத்திராவின் ஒட்டுமொத்த நீரோட்டத்தில் யார்லுங் சாங்போ நதி வெறும் 10 முதல் 15 சதவீத பங்களிப்பை மட்டுமே வழங்குகிறது. மீதமுள்ள நீர் இந்தியாவில் உள்ள பிற துணை நதிகள் மற்றும் பருவமழையின் மூலமே கிடைக்கிறது. எனவே, சீனா நினைத்தவுடன் நீரை முழுமையாக நிறுத்த முடியாது என்றும், அவ்வாறு திருப்ப முயன்றால் சீனப் பகுதியிலேயே பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆனால், அதைவிட பெரிய ஆபத்து என்னவென்றால், இந்த பூகம்ப மண்டலத்தில் கட்டப்படும் அணை ஏதேனும் ஒரு இயற்கை சீற்றத்தால் உடைந்தால் கீழ்மடையில் உள்ள அசாம் மற்றும் வங்கதேசத்தில் மிகப்பெரிய பேரழிவை உண்டாக்கும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர். இத்திட்டத்தின் ஆபத்துகள் குறித்து கடந்த ஆண்டு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் மற்றும் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் ஏற்கனவே சீன அதிகாரிகளிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.