அமெரிக்காவில் இந்திய சிறுமி ஷெரின் மெத்யூ காணாமல் போன வழக்கில் அவரது வளர்ப்புத் தந்தையான வெஸ்லே மெத்யூ கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க இந்தியரான கேரளாவைச் சேர்ந்த வெஸ்லே மெத்யூ என்பவர் கடந்த அக்டோபர் 7-ம் தேதி தனது வளர்ப்பு மகளான ஷெரின் மெத்யூவைக் (3 வயது) காணவில்லை என்று போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் நடத்திய விசாரணையில், சிறுமி ஷெரீன், பால் குடிக்க மறுத்ததால் அவரை அதிகாலை 3 மணியளவில் வீட்டுக்கு வெளியே விட்டதாகவும் சில மணி நேரம் கழித்துச் சென்று பார்த்தப்போது ஷெரீனைக் காணவில்லை என்றும் போலீஸாரிடம் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து போலீஸார் ஷெரீனைத் தேடி தீவிர விசாரணையில் இறங்கினர்.
தற்போது இவ்வழக்கின் திருப்பமாக திங்கட்கிழமையன்று வெஸ்லே மெத்யூவைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து டெக்சாஸ் போலீஸ் அதிகாரிகள் தரப்பில், "ஷெரின் காணாமல்போன வழக்கில் முன்னுக்குப்பின் முரணாக வெஸ்லே பதில் அளித்து வருகிறார். ஷெரின் காணாமல்போன வழக்கில் முன்னர் அளித்த வாக்குமூலமும் சமீபத்தில் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அளித்த வாக்குமூலமும் முற்றிலும் வேறுபட்டுள்ளது. இதனையடுத்து வெஸ்லே கைது செய்ய்ப்பட்டுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்கு தொடர்பாக வெஸ்லேவிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்
இந்த நிலையில் டெக்சாஸ் போலீஸார் வெஸ்லேவின் வீட்டிலுள்ள சுரங்கப் பாதையிலிருந்து 3 வயது மதிக்கத்தக்க குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெஸ்லேவும் அவரது மனைவி சினியும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிஹாரிலுள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்திலிருந்து ஷெரீனைத் தத்தெடுத்துள்ளனர்.