உலகம்

ராப் இசை நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்: 24 பேர் பலி

செய்திப்பிரிவு

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியில் ராப் இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 13 இளம்பெண்கள் உள்பட 24 பேர் உயிரிழந்தனர்.

ரமலான் பண்டிகையன்று நடைபெற்ற இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப் படுவதாக அந்நாட்டு அரசு அறிவித் துள்ளது. தலைநகர் கொனாக்ரியில் உள்ள கடற்கரையில் அந்நாட்டில் பிரபலமான இன்ஸ்டின்க்ட் கில்லர் இசைக் குழுவினர் நிகழ்ச்சியை நடத்தினர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். முக்கியமாக இளம் பெண்களும், இளைஞர்களும் கூட்டத்தில் அதிகம் இருந்தனர்.

இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது திடீரென நெரிசல் ஏற்பட்டது. இதில் பலர் கீழே விழுந்தனர். இதில் பலர் மிதிபட்டும், சிலர் மூச்சுத் திணறியும் உயிரிழந்தனர். மொத்தம் 24 சடலங்கள் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டன. இதில் 13 பேர் இளம் பெண்கள். காயமடைந்தவர்கள் நகரின் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

எதனால் நெரிசல் ஏற்பட்டது என்பதற்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை. இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின் றனர். இசை நிகழ்ச்சிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது நீண்டகாலமாக நடை பெற்று வருகிறது. சிறிய இடத்தில் அதிக அளவில் ரசிகர்கள் குவிவதுதான் இதற்கு முக்கியக் காரணமாக உள்ளது.

SCROLL FOR NEXT