சிலியில் மூன்று நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் இளவரசர் ஹாரி, அங்குள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் நகைச்சுவையாகப் பேசி, விளையாடினார்.
சமூக வளர்ச்சித் துறை அமைச்சர் மரியா பெர்னான்டா வில்லேகஸுடன் இணைந்து, பிரண்ட்ஸ் ஆப் ஜீசஸ் சில்ட்ரன்ஸ் பெசிலிட்டி அமைப்புக்குச் சென்று, அங்குள்ள குழந்தைகளுடன் பொழுதுபோக்கினார். அங்குள்ள பெரும்பாலான குழந்தைகள் மாற்றுத்திறனாளிகள். தனது மூன்றுநாள் சுற்றுப்பயணத்தில் சிலி குழந்தைகளுடன் ஹாரி தன் நேரத்தைச் செலவிடுவது இது இரண்டாவது முறையாகும்.
முன்னதாக, முகாமிலுள்ள மாற்றுத் திறனாளி இளைஞர்களை அவர் சந்தித்துப் பேசினார். ஹாரி மற்றவர்களுடன் பேச மொழி ஒரு தடையாக இல்லை. இருதரப்பினரும் பரஸ்பரம் புரிந்து கொண்டு தகவல்களைப் பரிமாறிக் கொண்டனர். வல்பாறைசோ நகரில் தீக்கிரையான பகுதிகளைப் பார்வையிட்ட அவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசினார்.
ஞாயிற்றுக்கிழமையுடன் அவரின் 3 நாள் சுற்றுப்பயணம் நிறைவடைந்தது. முன்னதாக, சிலி அதிபர் மைக்கேல் பாச்லெட்டை சிறிது நேரம் சந்தித்துப் பேசினார். 29 வயதாகும் பிரிட்டன் இளவரசர் ஹாரி, பிரிட்டன் அரியணைக்குத் தகுதியுடையவர்கள் வரிசையில் 4-வது இடத்தில் உள்ளார்.
அவர் தற்போது ராணுவத்தில் கேப்டனாக இருப்பது குறிப்பிடத்தக்கது.