உலகம்

விமானப் பயணிகளின் உடல்கள், கருப்புப் பெட்டி ஒப்படைப்பு: சம்பவ பகுதியில் ஆய்வு நடத்தவும் உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் அனுமதி

செய்திப்பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் கருப்புப் பெட்டியை மலேசிய அதிகாரிகளிடம் உக்ரைன் கிளர்ச்சி யாளர்கள் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனர். மேலும் விமானப் பயணிகளின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள சிறப்பு ரயில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டோரஸ் நகரில் இருந்து உக்ரைன் அரசு கட்டுப்பாட்டில் உள்ள கார்கீவ் நகரை சென்றடைந்தது.

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் அரசுப் படைகளுக்கும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அப் பகுதி வான்வழியாக கடந்த வியாழக்கிழமை பறந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் உயிரிழந்தனர். இவர்களில் 193 பேர் நெதர் லாந்தைச் சேர்ந்தவர்கள்.

விமானம் சிதறி விழுந்த இடம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப் பாட்டில் உள்ளது. அவர்கள் பயணிகளின் உடல்களை மீட்டு குளிர்சாதன வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் வைத்தனர். அந்த ரயில் பெட்டிகள் டோரஸ் நகர ரயில் நிலையத்தில் நிறுத் தப்பட்டிருந்தது. மேலும் விமானத் தின் 2 கருப்புப் பெட்டிகளையும் கிளர்ச்சியாளர்கள் கண்டுபிடித்து தங்கள் கைவசம் வைத்திருந்தனர்.

இதனிடையே மலேசிய அரசு சார்பில் கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து விமானத்தின் 2 கருப் புப் பெட்டிகளையும் மலேசிய அரசிடம் கிளர்ச்சியாளர்கள் செவ்வாய்க்கிழமை ஒப்படைத் தனர்.

மேலும் விமானப் பயணிகளின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள ரயில் டோரஸ் ரயில் நிலையத்தில் இருந்து அரசு கட்டுப்பாட்டில் உள்ள கார்கீவ் நகரை செவ்வாய்க்கிழமை சென்றடைந்தது. அங்கு நெதர்லாந்து, பிரிட்டன், ஆஸ்திரேலியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளின் நிபுணர்கள் உடல்களை அடையாளம் காண உள்ளனர். உயிரிழந்தவர்களில் 193 பேர் நெதர்லாந்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அந்த ரயில் நெதர்லாந் துக்கு செல்லும் என்று தெரிகிறது.

ஆய்வுக்கு அனுமதி

விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தில் சர்வதேச நிபுணர்கள் ஆய்வு நடத்த கிளர்ச்சியாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இதன்படி சம்பவ பகுதியில் சுமார் 10 கிலோமீட்டர் சுற்றளவு பரப்பளவுக்கு சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது என்று டோன்ஸ்க் மக்கள் குடியரசின் பிரதமராகச் செயல்படும் அலெக் சாண்டர் போரோடாய் அறிவித் துள்ளார்.

ரஷ்யா குற்றச்சாட்டு

ரஷ்ய ராணுவ மூத்த அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் ஆண்ட்ரே கார்டோபோலோவ், மாஸ்கோவில் கூறியதாவது:

சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் பறந்த அதே நேரத்தில் உக்ரைன் ராணுவ விமானமும் அதே பாதையில் பறந்துள்ளது. பயணிகள் விமானப் போக்குவரத்து பாதையில் ராணுவ விமானம் நுழைந்தது ஏன்? உக்ரைன் ராணுவ ஏவுகணைத் தளங்களில் சம்பவ நாளான வியாழக்கிழமை அசாதாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. எங்களது கேள்வி களுக்கு உக்ரைன் அரசு பதில் அளிக்க வேண்டும் என்றார்.

உக்ரைன் மறுப்பு

இந்தக் குற்றச்சாட்டுகளை உக்ரைன் அரசு மறுத்துள்ளது. “மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது கிளர்ச்சியாளர்கள் தான், விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு புக் எம்-1 ரகத்தைச் சேர்ந்த 3 ஏவுகணைகள் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் இருந்து ரஷ்ய பகுதிக்கு கடத்தப்பட்டுள்ளன, இதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன” என்று உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.

ஐ.நா. தீர்மானத்துக்கு ரஷ்யா ஆதரவு

விமானம் விழுந்த இடத்துக்கு சர்வதேச நிபுணர்கள் செல்ல கிளர்ச்சியாளர்கள் அனுமதிக்க வேண்டும் என்று கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஆஸ்திரே லியா தீர்மானம் கொண்டு வந்தது. தீர்மானம் 15 உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. வீட்டோ அதிகாரம் கொண்ட ரஷ்யாவும் தீர்மானத்துக்கு ஆதரவு அளித்தது.

SCROLL FOR NEXT