சிரிய உள்நாட்டுப் போரில் சிங்கப்பூர் முஸ்லிம் இளைஞர்கள் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், உள்ளூர் மலாய் முஸ்லிம் சமூகத்தினருடன் சிங்கப்பூர் தலைவர்கள் பேச்சு நடத்தினர்.
முஸ்லிம் சமூக மற்றும் மதத் தலைவர்கள் 60 பேருடன் துணை பிரதமர் டியோ சீ ஹீன், முஸ்லிம் விவகாரங்கள் துறை அமைச்சர் யாகோப் இப்ராஹிம் ஆகிய இருவரும் சிரிய விவகாரம் தொடர்பாக ரகசிய பேச்சு நடத்தியதாக சிங்கப்பூர் நாளேடு ஒன்று வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
சிரிய உள்நாட்டுப் போரில் சிங்கப்பூர் முஸ்லிம்கள் பலர் பங்கேற்றுள்ளதாக துணை பிரதமர் டியோ சீ ஹீன் கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் கூறினார். அவர் பேசும்போது, “சிரிய உள்நாட்டுப் போரில் 12 ஆயிரம் வெளிநாட்டினர் பங்கேற்றுள்ளனர். இதில் சிங்கப்பூர்வாசிகளும் இடம் பெற்றுள்ளனர். இதில் ஹாஜா பக்ருதீன் உஸ்மான் அலி (37) என்ற சிங்கப்பூர் – இந்திய இளைஞர், தனது மனைவி, 2 முதல் 11 வயது வரையிலான தனது 3 குழந்தைகளுடன் அங்கு சென்றுள்ளார்.
சிங்கப்பூர் பெண் ஒருவர், தனது வெளிநாட்டுக் கணவர் மற்றும் 2 ‘டீன் ஏஜ்' குழந்தைகளுடன் சிரியா சென்றுள்ளதாக நாளேடு ஒன்றில் செய்தி வந்துள்ளது. பயங்கரவாதிகளுடன் இணைந்து போரிடுவது அல்லது ஏதேனும் ஒருவகையில் அவர்களுக்கு உதவுவது என்று ஒட்டுமொத்த குடும்பமும் போரில் பங்கேற்றுள்ளது” என்றார்.
அவர் மேலும் கூறும்போது, “ஜிகாதி குழுக்களுடன் இணைந்து போரிடுவதற்காக சிங்கப்பூரைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் பலர் சிரியா செல்வதில் ஆர்வம் காட்டினர். ஆனால் இவர்களின் திட்டம் முன்கூட்டியே தெரியவந்ததால் அவர்கள் தடுக்கப்பட்டனர்.
இவர்களில் அப்துல் பஷீர் அப்துல் காதர் என்ற வழக்கறிஞரும் ஒருவர். இவர் 2007 முதல் 2010 வரை சிங்கப்பூர் உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் இருந்தவர். 2012-ல் புனிதப்போரில் பங்கேற்க இவர் வெளிநாடு செல்ல ஆயத்தமானபோது மீண்டும் கைது செய்யப்பட்டார்.
மற்றவர்களில் ஜகாரியா ரோஸ்டன் என்பவர் வெளிநாட்டு பயங்கரவாத குழுக்களுடன் ஆன்லைன் மூலம் தொடர்பு ஏற்படுத்த முயன்றவர். இவருக்கு கைருல் சொப்ரி பின் உஸ்மான் என்பவர் துணையாக இருந்தார். ஜகாரியா, கைருல் ஆகிய இருவருக்கும் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடந்த டிசம்பரில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
மற்றவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இவர்கள் சிங்கப்பூர் உள்பட பல நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். சிரிய உள்நாட்டுப் போரால் சிங்கப்பூரின் சமூக ஒற்றுமையும் பாதிக்கும் வாய்ப்புள்ளது. சிங்கப்பூர்வாசிகள் சிரியா சென்றிருப்பதாக தெரியவருவதன் மூலம் சிங்கப்பூரில் பல்வேறு சமூகத்தினரிடையே அவநம்பிக்கையும் பதற்றமும் ஏற்படும் வாய்ப்புள்ளது” என்றார்.
2011, மார்ச் மாதம் தொடங்கிய சிரிய உள்நாட்டுப் போரில் இதுவரை சுமார் 1 லட்சத்து 62 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.