ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் ஷெரின் இருந்தவரை அவருக்கு எந்தக் குறைபாடும் இருந்ததில்லை என்று அக்காப்பகத்தின் உரிமையாளர் கூறியுள்ளார்.
அமெரிக்க இந்தியரான கேரளாவைச் சேர்ந்த வெஸ்லி மேத்யூ மற்றும் அவரது மனைவி சினி மேத்யூ ஆகியோர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிஹாரிலுள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்திலிருந்து ஷெரினைத் தத்தெடுத்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் 7-ம் தேதி தனது வளர்ப்பு மகளான ஷெரின் மேத்யூவைக் (3 வயது) காணவில்லை என்று வெஸ்லி போலீஸில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் முன்னுக்கு பின்னாக வெஸ்லி மேத்யூ பதிலளித்தார்.
தொடர்ந்து போலீஸார் வெஸ்லேவிடம் நடத்திய விசாரணையில்,
"ஷெரினை குழந்தைகள் காப்பகத்திலிருந்து தத்தெடுத்தபோதே அவருக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருந்தது. ஷெரின் உடல் எடை அதிகரிக்க அவளுக்கு உணவளிக்க வேண்டும். சம்பவத்தன்று ஷெரின் பால் குடிக்க மறுத்துவிட்டாள். தொடர்ந்து அழுததில் அவளுக்கு புரையேறிவிட்டது. அதன்பின்னர் அவளது உடலில் எந்த நாடித் துடிப்பு ஓட்டமும் இல்லை. இதனால் அவள் இறந்துவிட்டதாக நினைத்து வீட்டுக்கு அருகிலிருந்த சுரங்கப் பாதையில் வைத்து விட்டேன்"என்று வாக்குமூலம் அளித்தார்.
இந்த நிலையில் போலீஸாரிடம் வெஸ்லி கூறியதை, இந்தியாவில் ஷெரின் தங்கியிருந்த குழந்தைகள் காப்பக உரிமையாளர் பபிதா குமாரி மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,"ஷெரின் எங்கள் காப்பகத்தில் இருந்தபோது அவருக்கு எந்தக் குறைபாடும் இருந்ததில்லை. உணவு உண்பது மற்றும் பால் அருந்துவதிலும் கூட ஷெரினுக்கு எந்த பிரச்சினையும் இருந்ததில்லை'' என்றார்.
ஷெரினைத் தாக்கியதாக வெஸ்லே மேத்யூ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாக அமெரிக்க போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.