அமெரிக்காவைச் சேர்ந்த ராய்னர் வெய்ஸ், கிப் தோர்ன், பேரி பேரிஷ் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப் பட்டுள்ளது.
சுவீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஜெப்ரி சி ஹால், மைக்கேல் ராஷ்பேஷ், மைக்கேல் டபிள்யூ யங் ஆகிய 3 பேருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு நேற்றுமுன்தினம் அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவைச் சேர்ந்த ராய்னர் வெய்ஸ் (85), கிப் தோர்ன் (77), பேரி பேரிஷ் (88) ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு நேற்று பகிர்ந்தளிக்கப்பட்டது. ஈர்ப்பு அலைகளை உறுதி செய்ததற்காக அவர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2015 செப்டம்பர் 14-ல் அமெரிக்காவின் லிகோ ஆய்வகத்தின் உணர்மானிகள் முதல்முறையாக கருந்துளைகளின் ஈர்ப்பு அலைகளைப் பதிவு செய்தன. இந்த ஆய்வுக்காக லிகோ ஆய்வக விஞ்ஞானிகள் ராய்னர் வெய்ஸ், கிப் தோர்ன், பேரி பேரிஷ் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ராய்னர் வெய்ஸ் ஜெர்மனியை பூர்விகமாக கொண்டவர்.
நோபல் பதக்கத்துடன் ரூ.7.2 கோடி பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது. இதில் பாதி தொகை ராய்னர் வெஸ்ஸுக்கு வழங்கப்படும். மீதி தொகையை தோர்னும் பேரிஷும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்வார்கள்.