உலகம்

உலக மசாலா: உள்ளம் கொள்ளைகொள்ளும் சீட்டுக்கட்டு ஜாடிகள்!

செய்திப்பிரிவு

சீ

னாவில் வசிக்கும் 65 வயது ஸாங் கேஹுவா, பிரத்யேகமான ஒரு கலையில் நிபுணராக இருக்கிறார்! சீனாவின் புகழ்பெற்ற பீங்கான் ஜாடிகளைப் போலவே பிளாஸ்டிக் சீட்டுக் கட்டுகளில் ஆள் உயர ஜாடிகளை உருவாக்கி அசத்திவிடுகிறார்! “சீட்டுக் கட்டுகளை வைத்து எவ்வளவோ பேர், எத்தனையோ விதங்களில் உருவங்களைச் செய்திருக்கிறார்கள். ஆனால் ஸாங் கேஹுவா போல் இதுவரை யாரும் செய்ததில்லை. இவருடைய படைப்பு மிக உன்னதமான இடத்தில் இருக்கிறது. பிளாஸ்டிக் கார்டுகளை மடிப்பது அத்தனை எளிதான விஷயம் இல்லை. விடாமுயற்சியால் இவர் இந்தக் கலையைக் கைப்பற்றிக்கொண்டார். தூரத்தில் இருந்து பார்த்தால் பீங்கான் ஜாடிகளைப் போலவே அழகாக இருக்கின்றன!” என்கிறார் மாவோ ஸாங். “பழம்பெருமை வாய்ந்த கட்டிடங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதுதான் என்னுடைய வேலை. தொழில்நுட்பம் இல்லாத அந்தக் காலத்தில் எவ்வளவு அற்புதமான வேலைப்பாடுகளுடன் ஒவ்வொரு பொருளையும் மனிதர்கள் உருவாக்கியிருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அவற்றை எல்லாம் பார்த்து நானும் ஏதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். பிளாஸ்டிக் சீட்டுகள் கண்ணில் பட்டன. பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு, ஜாடி செய்யும் நுட்பத்தை உருவாக்கினேன். உடனே எனக்கு வெற்றி கிடைத்துவிடவில்லை. சவாலாக எடுத்துக்கொண்டு, ஜாடியைச் செய்து முடித்தேன். பார்த்தவர்கள் அசல் ஜாடி என்று பாராட்டினார்கள். பிறகு சிறிய ஜாடிகளிலிருந்து ஆள் உயர ஜாடிகள்வரை செய்ய ஆரம்பித்துவிட்டேன். 106 செ.மீ. உயரம் உள்ள ஒரு ஜாடியை உருவாக்க, 5 ஆயிரம் கார்டுகள் தேவைப்படும். ஒரு வாரத்தில் செய்து முடித்துவிடுவேன். வீட்டு அலங்காரத்துக்கும் பரிசாகக் கொடுப்பதற்கும் மக்கள் ஆர்வத்துடன் ஜாடிகளை வாங்கிச் செல்கிறார்கள்” என்கிறார் ஸாங் கேஹுவா.

உள்ளம் கொள்ளைகொள்ளும் சீட்டுக்கட்டு ஜாடிகள்!

மெ

லானி பார்போனி சுவிட்சர்லாந்தைச் சேர்ந்தவர். வானியல் மையத்தில் உதவி ஆராய்ச்சியாளராக லாஸ் ஏஞ்சல்ஸில் பணியாற்றி வருகிறார். இவரை வானியல் ஆராய்ச்சியாளர் என்பதைவிட ‘ரீங்காரச்சிட்டு ஆராய்ச்சியாளர்’ என்றே பலரும் அழைக்கிறார்கள். இவரது அலுவலக ஜன்னலுக்குத் தினமும் 200 ரீங்காரச்சிட்டுகள் வருகின்றன. உணவு அருந்துகின்றன. தண்ணீர் குடிக்கின்றன. “ரீங்காரச்சிட்டுகள் மிக வேகமாக இயங்கக்கூடியவை. பொதுவாக அருகில் பார்க்க முடியாது. சுவிட்சர்லாந்தில் ரீங்காரச்சிட்டுகளே இல்லை என்று சொல்லலாம். புத்தகங்களில்தான் பார்த்திருக்கிறேன். அதனால் எனக்கு இவற்றின் மீது ஈர்ப்பு வந்துவிட்டது. வேலைக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் வந்தபோது, ஆண்டு முழுவதும் இங்கே இந்தப் பறவைகளைப் பார்க்க முடியும் என்ற செய்தி அறிந்து மகிழ்ந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அலுவலக ஜன்னலில் பூந்தேனையும் தண்ணீரையும் வைத்தேன். பறவைகள் உணவு தேடி வர ஆரம்பித்தன. இன்று சுமார் 200 பறவைகள் இந்த ஜன்னலுக்கு வருகின்றன. என் கைகளில் இருந்து உணவு சாப்பிடும் அளவுக்கு நெருக்கமாகிவிட்டன. வேலை அதிகமாக இருக்கும்போது இவற்றைக் கவனிக்காவிட்டால், சத்தமிட்டு அழைக்கின்றன” என்கிறார் மெலானி பார்போனி.

ரீங்காரச்சிட்டுகளின் தோழி!

SCROLL FOR NEXT