மடக்கிப் பிடிக்கப்பட்ட சந்தேக நபர். 
உலகம்

ஜப்பான் பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மர்மப் பொருள் வீச்சு; கூட்டத்தில் பரபரப்பு: ஒருவர் கைது

செய்திப்பிரிவு

டோக்கியோ: ஜப்பான் நாட்டின் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கலந்துகொண்ட நிகழ்ச்சியில் திடீரென அவர் மீது வீசப்பட்ட மர்மப் பொருள் காரணமாக நிகழ்விடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக வெளியான ஊடகச் செய்திகளில், "வக்காயமாவில் சிக்காசாக்கி துறைமுகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திறந்த மேடையில் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி ஒரு மர்மப் பொருள் பாய்ந்து வந்தது. அது சற்று முன்னரே விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. கிஷிடா நல்வாய்ப்பாக தப்பித்துக் கொண்டார். துரிதமாக செயல்பட்டு தன்னைத் தற்காத்துக் கொண்ட பிரதமர் கிஷிடாவை மெய்க்காவலர்கள் பத்திரமாக மீட்டு அழைத்துச் சென்றனர். இந்த நிகழ்வில் பிரதமருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. மர்மப் பொருள் வீசிய நபரை பாதுகாப்புக் குழுவினர் மடக்கிப் பிடித்தனர். அவர் வீசியது ஸ்மோக் பாம்ப் எனப்படும் புகையை எழுப்பும் குண்டாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவ இடத்தில் இருந்த செய்தி ஊடகங்கள் பதிவு செய்த காட்சி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

ஷின்சோவின் படுகொலை: கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி ஜப்பானின் மேல்சபைக்கு போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து தெற்கு நகரமான நாராவில் அபே பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரத்தின் போதுதான் ஜப்பான் கடற்படையின் தற்காப்புப் பிரிவு முன்னாள் உறுப்பினரால் துப்பாக்கியால் சுடப்பட்டு அவர் கொல்லப்பட்டார். ஷின்சோ அபேவின் மரணம் ஜப்பான் மக்களிடம் அதிர்வலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அந்த சம்பவம் நடந்து 9 மாதங்கள் ஆன நிலையில் இன்று பிரதமர் ஃபுமியோ கிஷிடா கலந்துகொண்ட நிகழ்ச்சியில் மர்மப் பொருள் வீசப்பட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT