வடகொரியா 6-வது முறையாக ஹைட்ரஜன் அணுகுண்டு ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக தென்கொரியா கூறியுள்ளது.
இதுகுறித்து தென்கொரியாவின் வானிலை மைய தலைமை இயக்குநர் கூறும்போது, "வடகொரியா நடத்திய 6-வது ஹைட்ரஜன் அணுகுண்டு சோதனையால் ஹம்யாங் மாகாணத்தில் சுமார் 12.29 மணியளவில் செயற்கையான நில அதிர்வு ஏற்பட்டது. இதன் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 -ஆக பதிவாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து 4.6 ரிக்டர் அளவில் மற்றுமொரு நில அதிர்வும் ஏற்பட்டது" என்றார்.
வடகொரியா இறுதியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹைட்ரஜன் அணுகுண்டு சோதனை நடத்தியது. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறியும் வடகொரியா தனது பலத்தை நிருபிக்கும் வகையில் அணுகுண்டு, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
இதற்கு பதிலடியளிக்கும் வகையில் அமெரிக்க, தென்கொரிய ராணுவங்கள் வடகொரியாவுக்கு எதிராக கூட்டு போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில் வடகொரியாவின் இந்த நடவடிக்கை மீண்டும் கொரிய தீபகற்பப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.