உலகம்

அமெரிக்காவில் சீக்கிய குருத்துவாராவில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் காயம்

செய்திப்பிரிவு

கலிபோர்னியா: அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சீக்கியர்கள் வழிபாட்டுத்தலமான குருத்துவாராவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர். கலிபோர்னியா மாகாணம் சாக்ரமென்டோ பகுதியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.

இது தொடர்பாக சாக்ரமென்டோ கவுன்ட்டி ஷெரீஃப் கூறுகையில், "நடந்த சம்பவம் இரு தனி நபர்களுக்கு இடையேயான வெறுப்பின் காரணமாக நடந்துள்ளது. துப்பாக்கி குண்டு பாய்ந்த இருவருமே ஆபத்தான நிலையில் உள்ளனர். ஆகையால் இது வெறுப்பினால் நடந்த இனவாத குற்றம் ஏதுமில்லை என்று உறுதியாகிறது" என்று தெரிவித்தார்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பிரித்து காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாட்டை உருவாக்கும் முயற்சியில் வெளிநாடுவாழ் பஞ்சாபியர்களில் சிலர் முயன்று வருகின்றனர். இந்தியாவில் அவர்களுக்கு ஆதரவாக அம்ரித்பால் சிங் செயல்பட்டு வந்தார். சீக்கிய மத போதகரான அவர் மீது இருந்த வழக்குகள் தொடர்பாக அண்மையில் அவரை கைது செய்ய போலீசார் முயன்றபோது அவர் தப்பி ஓடிவிட்டார். அவரை தேடி பிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அம்ரித்பால் சிங் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதை அடுத்து, வெளிநாடுகளில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக போராட்டங்களை மேற்கொண்டனர். கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்த போராட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையில் அமெரிக்காவில் சீக்கிய குருத்துவாராவில் நடந்த துப்பாக்கிச் சூடு பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய சூழலில் அது வெறுப்புக் குற்றமல்ல தனிநபர் பிரச்சினை என்பது உறுதியாகியுள்ளது.

SCROLL FOR NEXT