வடகொரியாவின் அடுத்த அணு ஆயுத சோதனை அறிவிப்புக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்காக அமெரிக்கா தனது ராணுவ தளங்களையும் உபயோகப்படுத்த தயங்காது என்று அதிபர் ஒபாமா கூறினார்.
வடகொரியா- தென்கொரியா இடையே மோதல் போக்கு நிலவுகிறது. தென் கொரியாவிற்கு அச்சுறுத்தலாகவும், போருக்கு முன் அறிவிப்பாக தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. இதற்காக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் கண்டனத்துக்கு உள்ளாகி வரும் அந்த நாடு, தற்போது மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து தென்கொரிய ராணுவ அதிகாரி கூறுகையில், ஏற்கனவே அணு ஆயுத சோதனை நடத்திய பங்க்யே அன் ரி பகுதியில் மீண்டும் ஒரு சோதனைக்கு வடகொரிய வீரர்கள் தயாராகி வருவதாகவும், அந்நாட்டு தலைமையிடம் இருந்து உத்தரவு வந்தவுடன், எந்த நேரத்திலும் இந்த சோதனை நடைப்பெறக்கூடும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அதிபர் ஒபாமா, அந்த பயணத்தின் ஒரு பகுதியாக கொரியா சென்றுள்ளார். அப்போது சியோலில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா,
"வடகொரியாவின் இந்த செயல் மிகுந்த கண்டனத்திற்குரியது. வடகொரியா, மேலும் ஒரு அணு ஆயுத சோதனையை மேற்கொண்டால், அந்நாடு சர்வதேச விளைவுகளை சந்திக்க நேரிடும். தென் கொரியாவில் அமெரிக்க தரப்பினர் வட கொரியாவை கண்காணிக்கும் பணிக்காக ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்காக அமெரிக்கா தனது ராணுவ தளங்களையும் உபயோகப்படுத்த தயங்காது.
நாங்கள் இதன் மூலம் எந்த நாட்டினுடைய கவனத்தையும் ஈர்க்க செய்யவில்லை. இதற்கு உலக நாடுகளின் ஒத்துழைப்பை மட்டுமே நாடுகிறோம்.
யார் வேண்டுமானாலும் மிரட்டல் விடுக்கலாம், தங்களது ராணுவத்தை உபயோகிக்கலாம் , அணு ஆயுதங்களை ஏவலாம். ஆனால் அவை எல்லாம் வலிமையை நிரூபிக்கும் செயல் அல்ல.
நாங்கள் எங்கள் ராணுவத்தை வைத்து பிறரை அச்சுறுத்துவது இல்லை. மாறாக எங்களது சகோதர நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்" என்று பேசினார்.