உள்நாட்டுப் போர் மூண்டுள்ள இராக்குக்கு மேலும் 300 ராணுவ வீரர்களை அனுப்பியுள்ளது அமெரிக்கா. பாக்தாதில் உள்ள தமது தூதரகம், அதன் உதவி அமைப்புகள், பாக்தாத் சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றின் பாதுகாப்புக்கு இவர்கள் உதவுவார்கள்.
இந்த தகவலை நாடாளுமன்ற தலைவர்களிடம் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார். விமானம், உளவு, கண்காணிப் புப்பிரிவு குழுவினரும் அனுப்பப் பட்டுள்ளனர். இராக்கில் உள்ள அமெரிக்கர்கள், அவர்களது உடைமைகளை பாதுகாத்திட இவர்கள் உதவுவார்கள். இனி பாதுகாப்பு தேவையில்லை என்கிற நிலைமை இராக்கில் வரும் வரை இந்த வீரர்கள் அங்கேயே இருப்பார்கள் என்றார் ஒபாமா.
இந்த வீரர்கள் அனைவரும் இராக் போய் சேர்ந்து விட்டதாக பென்டகன் ஊடகப் பிரிவு செயலர் ஜான் கிர்பி தெரிவித்தார். விரைவில் இன்னும் 100 பேரும் பாக்தாத் செல்வார்கள்.
மசூதி மீது தாக்குதல்
இதனிடையே, சமாரா நகரம் அருகே உள்ள ஷியா பிரிவினரின் மசூதி வாசல் அருகே 3 பீரங்கி குண்டுகள் வந்து விழுந்தன. இதில் 9 பேர் காயம் அடைந்தனர். ஷியா முஸ்லிம் பிரிவினரால் மிகவும் புனிதமானதாக கருதப்பட்டு வழிபடுவதாகும் அல் அஸ்காரி மசூதியாகும். இதன் முகப்பு கூடு பொன்னால் ஆனதாகும்.
2006லும் இந்த மசூதியின் முகப்பு கூண்டை சன்னி தீவிரவாதிகள் தகர்த்தனர். இதனால் அப்போது ஷியா- :சன்னிகள் இடையே மோதல் ஏற்பட்டது.
ஜூனில் 2,417 பேர் பலி
இராக்கில் நடந்து வரும் உள்நாட்டுப் போர், வன்முறை காரணமாக ஜூன் மாதத்தில் மட்டும் 2,417 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது இவர்களில் 886 பேர் பாதுகாப்புப்படையினர் ஆவர். இதிலும், அன்பார் மாகாணத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு சேர்க்கப்படவில்லை.
கடந்த சில வாரங்களாக அல் காய்தா ஆதரவு பெற்ற ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மின்னல் வேக தாக்குதல் நடத்தி, பல்வேறு நகரங்களை கைப்பற்றி வருகின்றனர்.
நாடாளுமன்றம் கூடியது
இராக் நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை கூடியது. இதில் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாம் கைப்பற்றிய பகுதிகளை உள்ளடக்கி சொந்தமாக அரசை ஏற்படுத்தியிருக்கிறார்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள். அதற்கான ஆட்சியாளராக அபு பக்ர் அல் பாக்தாதி என்பவரை நியமித்திருக்கிறார்கள்.
இந்நிலையில், தன்னாட்சி பிராந்தியமான குர்திஸ்தானுக்கு சுதந்திரம் தேவையா இல்லையா என்பதை மக்களே முடிவு செய்ய இன்னும் சில மாதங்களில் கருத்துக் கணிப்பு நடத்தப்படும் என அதன் தலைவர் மசூத் பர்சானி தெரிவித்தார்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் இராக் பிரிந்து விட்டது. எனவே குர்திஸ்தான் மீதும் கருத்து கணிப்பு நடத்தி மக்களின் கருத்தறிந்து முடிவு செய்வது சரியானது என்றார் அவர். ஆனால் கருத்துக் கணிப்புக்கு சட்டத்தில் இடமில்லை என இராக் தெரிவித்துள்ளது.