உலகம்

பாஜக-வை வேவு பார்த்த விவகாரம்: உறவு பாதிக்காது என்கிறது அமெரிக்கா

செய்திப்பிரிவு

பாஜகவை வேவு பார்த்த விவகாரத்தால் இந்தியாவுடனான உறவு பாதிக்கப்படாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பாஜக உள்பட எகிப்து, வெனிசூலா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் 6 முக்கிய அரசியல் கட்சிகளை அமெரிக்காவின் உளவு அமைப்பான என்.எஸ்.ஏ. வேவு பார்த்ததை வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் அண்மையில் அம்பலப்படுத்தியது.

இதற்கு இந்திய அரசு சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்கும்படி அமெரிக்க தூதரகத்துக்கு புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் செப்டம்பரில் அமெரிக்காவுக்கு செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் வேவு பார்ப்பு விவகாரம் இரு நாடுகளிடையே நெருடலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி வாஷிங்டனில் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை மூத்த அதிகாரிகள் இந்திய வெளியுறவுத் துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன் விவரங்களை பகிரங்கமாக வெளியிட முடியாது. இந்தியாவுடனான உறவில் நிச்சயமாக எந்த பாதிப்பும் இருக்காது என்று நம்புகிறோம். அமெரிக்காவுக்கு வருகை தருமாறு இந்தியப் பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT